கரோனா வைரஸ் தொற்றானது உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இதன் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, தற்போது படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சியில் நேற்று வரை 88 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இவர்கள் அனைவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதில் 70 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். 18 பேர் மட்டும் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் சில தினங்களாக கரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி இன்று உயிரிழந்தார்.
இதன் மூலம் திருச்சியில் கரோனாவுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மீதமுள்ள அனைவருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.