திருச்சி : உறையூர் கீழ பாண்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அப்துல்சலாம். இவரது மனைவி கைருநிஷா. இவர்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த இரண்டு மாதத்துக்கு முன் இரண்டாவதாக ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
கூலித்தொழிலாளியான அப்துல்சலாம், சரிவர வேலைக்கு செல்லாமல் அக்கம்பக்கத்தினர், நண்பர்களிடம் கடன் வாங்கி சூதாடி வந்துள்ளார். இதனால் அதிகளவில் கடனாளி ஆனார். கடன் கொடுத்தவர்களும் பணத்தை கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடன் கொடுத்த தென்னூர் அண்ணாநகரை சேர்ந்த ஆரோக்கியராஜ் அப்துல்சலாமிடம், வாங்கிய கடனை கொடுக்க வேண்டாம். மேலும், ரூ.80 ஆயிரம் தருகிறேன் இரண்டு மாதத்திற்கு முன்பு பிறந்த ஆண் குழந்தையை என்னிடம் கொடுத்துவிடு, நான் குழந்தையை உறவினரான தொட்டியம் கீழ சீனிவாசநல்லூர் சந்தானம் குமாரிடம் கொடுத்து நன்றாக வளர்க்க கூறுகிறேன் என ஆசைவார்த்தை கூறியுள்ளார்.
இதையடுத்து, அப்துல்சலாம் தனது மனைவியிடம் கூறி அவரின் மனதை மாற்றினார். இதையடுத்து கடந்த 19ஆம் தேதி குழந்தையை ஆரோக்கியராஜிடம் விற்றுள்ளார். ஆனால் கைருநிஷாவிற்கு குழந்தை நினைவாக உள்ளதால் தொடர்ந்து அப்துல் சலாமிடம் தனது குழந்தை வேண்டும் எனக் கேட்டுள்ளார்.
இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் கைருநிஷா உறையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்தப் புகாரை விசாரித்த காவல்துறையினர் அப்துல்சலாம், ஆரோக்கியராஜ், சந்தான குமாரை கைது செய்தனர். ஆண் குழந்தையை மீட்டு தற்போது காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
மூவரையும் திருச்சி குற்றவியல் நீதிமன்ற எண் நான்கில் ஆஜர்படுத்தி 14 நாள்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். தற்போது மூவரும் மணப்பாறை கிளைச் சிறையில் உள்ளனர்.