திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது தமிழ்நாடு ஏரி, ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் விஸ்வநாதன் தலைமையில் விவசாயிகள் திரண்டு வந்து, திடீரென ஆட்சியர் அலுவலக வாசலில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது விஸ்வநாதன் கூறுகையில், 'குறுவை சாகுபடி அழிந்துவருகிறது. காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும். தமிழ்நாட்டில் கடுமையான வறட்சி நிலவுகிறது. மழை இல்லை. அதனால் கூட்டுறவு சங்க கடன், வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். ஐந்து ஆண்டுகளாக ஆளும் கட்சி எம்பிக்கள் காவிரி நீரை பெற்றுத் தருவதில் மெத்தனமாக இருந்துவிட்டனர்.
அதனால் ஆளுங்கட்சி மீது நம்பிக்கை இழந்து மக்களவைத் தேர்தல்களில் தோற்கடித்துள்ளனர். திமுக கூட்டணி கட்சி 37 இடத்தில் வெற்றி பெற விவசாயிகள் உழைத்துள்ளனர். குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டி ஆறாம் தேதி நடைபெறுகின்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வலியுறுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் குறுவை சாகுபடியைக் காப்பாற்ற அதிமுக-திமுக இணைந்து மத்திய அரசுக்கு எதிராக வலுவான முடிவெடுக்க வேண்டும். குறுவை சாகுபடிக்கு தண்ணீர் பெற்றுத்தரக் கோரி முதலமைச்சர் வீட்டை விரைவில் முற்றுகையிடுவோம்' என்றார்.