திருச்சி மாவட்ட நீதிமன்றம் அருகேவுள்ள எம்ஜிஆர் சிலை வளாகத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நல்ல புத்தியை அளிக்கக்கோரி எம்ஜிஆர் சிலைக்கு மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், “தமிழ்நாடு முழுவதும் தொடர் கனமழையால் பல ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாகின. இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், இதர பயிர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், வெங்காயத்திற்கு 40 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என விவசாயிகளின் கோரிக்கையை ஏற்க தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்து வருகிறார்.
அதேபோல் சீர்மரபினர் 68 சாதிகளுக்கு ஒரே டிஎன்டி சான்றிதழ் வழங்கும் கோரிக்கையையும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றவில்லை. இதனால், விவசாயிகளின் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்து உரிய இழப்பீடு வழங்கவேண்டும்” என கேட்டுக்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து எம்ஜிஆர் சிலை அமைந்துள்ள ரவுண்டானா அருகே விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலையில் படுத்து நடத்திய இந்த போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு வந்த காவல் துறையினர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகளை கைது செய்தனர்.
இதையும் படிங்க: கனமழையால் தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள்: வேதனையில் விவசாயிகள்!