திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள சமுத்திரம் கிராமம் கத்திகாரன்பட்டியைச் சேர்ந்தவர் சின்னரங்கு உடையார். இவருக்கு மூன்று மகன்களும்,மூன்று மகள்களும் உள்ளனர். சின்னரங்குவுக்கு சமுத்திரம் கிராமத்தில் 14 ஏக்கர் 11 சென்ட் அளவுள்ள நிலம் உள்ளது. தற்போது சின்னரங்கு உயிரோடு இல்லாததை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட மூன்றாவது மகன் சின்னையா அவரது மகன் சண்முகம் பெயருக்கு கடந்த ஜூன் மாதம் ஆறாம் தேதி மணப்பாறை சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார்.
இதற்கு ஆட்சேபனை தெரிவித்து சின்னரங்கு முதல் மகன் குப்புடையார் பத்திரப்பதிவு உயரதிகாரிகள், திருச்சி மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோரிடத்தில் எதிர்ப்பு தெரிவித்ததோடு பத்திரப்பதிவை ரத்து செய்யக்கோரி மனு அளித்திருந்தார். இந்த மனு மீது கடந்த இரண்டு மாதங்களாக நடவடிக்கை எடுக்காமல் சார் பதிவாளர் அலைக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனைக் கண்டித்து இன்று மணப்பாறை சார்பதிவாளர் அலுவலகம் முன்பு குப்புடையார் தனது இரண்டு மகன்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது போலியான ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்ததை ரத்து செய்ய வேண்டும், அதற்கு உடந்தையாக இருந்த மணப்பாறை சார்பதிவாளர் மற்றும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சொத்தை அபகரித்த சின்னையா, அவரது மகன்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.
இதனையடுத்து தகவலறிந்து வந்த வருவாய் துறையினர், காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.