திருச்சி: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு மற்றும் கும்பாபிஷேகம் விழா நடைபெற உள்ளது. ராமர் கோயில் கும்பாபிஷேகம் மற்றும் பிரம்மாண்டமான கோயில் எப்படி இருக்கும் என்பதை அறிய நாடு முழுவதும் மக்கள் பலர் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.
கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி 11 நாட்கள் விரதம் மேற்கொண்டு இந்தியா முழுவதும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். இந்த நிலையில் 108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அழைக்கப்படுவதும், அயோத்தி ராமரின் குல தெய்வமான ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய பிரதமர் மோடி 20ஆம் தேதி காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகிறார்.
இதனிடையே தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் கருப்புகொடி காட்டும் போராட்டம் அல்லது உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்து உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. இதற்கு அனுமதி கேட்டு மாநகர காவல் ஆணையரிடம் மனு கொடுக்க அய்யாக்கண்ணு இன்று (ஜன. 18) காலை அவரது இல்லத்தில் இருந்து புறப்பட்டார்.
அப்போது அவரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். அவர் மாநகர காவல் ஆணையர் அலுவலகம் செல்ல முடியாதபடி
போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. நீங்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம், துணை ஆணையரே இங்கு வந்து உங்கள் மனுவை பெற்றுக் கொள்வார் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து பேசிய விவசாயி அய்யாக்கண்ணு, "விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்காக உயர்த்துவேன் என வாக்குறுதி கூறி பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தார். ஆனால் அவர் சொன்னபடி விவசாயிகள் வருமானத்தை 2 மடங்காக உயர்த்தவில்லை. இந்தியாவில் 95 கோடி விவசாயிகள் பொருளாதாரத்தில் மிகவும் மோசமான நிலையில் வாழ்கிறார்கள்.
எனவே பிரதமர் மோடி திருச்சி வரும்போது அவரை கண்டித்து கருப்புக்கொடி காட்டவோ, அல்லது உண்ணாவிரதம் இருக்கவோ அனுமதிக்க வேண்டும் என மனு கொடுக்க செல்லும்போது என்னை தடுத்து வீட்டுச் சிறையில் வைத்து உள்ளனர். எந்த அடக்குமுறை வந்தாலும் தடையை மீறி 20ஆம் தேதி போராட்டம் நடத்துவோம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் ராமரின் குலதெய்வமா? - கோயில் பட்டர் கூறுவது என்ன?