தமிழ்நாட்டில் உள்ள கிராம ஊராட்சிகளுக்கு வரும் 27, 30ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.
திருச்சி மாவட்டத்தில் 404 ஊராட்சிகளில் 3,408 வார்டு உறுப்பினர்கள் மற்றும் 404 ஊராட்சி மன்ற தலைவர் பதவிகள் என மொத்தம் 4,177 பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.
மேலும் 14 ஒன்றியங்களில் 341 வார்டு உறுப்பினர்கள் பதவிக்கும், 24 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. வேட்புமனு தாக்கல் வரும் 6ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
கிராம ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடுவோர், அந்தந்த கிராம ஊராட்சி அலுவலகத்தில் மனுதாக்கல் செய்ய வேண்டும். அதேபோல், ஊராட்சித் தலைவர் பதவி, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடுவோர் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும்.
மாவட்டம் முழுவதும் மொத்தம் 22 லட்சத்து 45 ஆயிரத்து 218 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஊரக உள்ளாட்சி மட்டும் 5 லட்சத்து 96 ஆயிரத்து 962 ஆண் வாக்காளர்கள், 6 லட்சத்து 23 ஆயிரத்து 993 பெண் வாக்காளர்களும், 63 திருநங்கைகள் என மொத்தம் 12 லட்சத்து 21 ஆயிரத்து 17 வாக்காளர்கள் உள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அனைத்து எம்எல்ஏ அலுவலகங்களுக்கும் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் அடிப்படையில் 136 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், பதற்றமான வாக்குச்சாவடிகள் கணக்கெடுக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. டிசம்பர் 8, 15, 27ஆம் தேதிகளில் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ’2021 சட்டப்பேரவைத் தேர்தல் வரை உள்ளாட்சித் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும்’ - தனியரசு எம்.எல்.ஏ.!