திருச்சி கோஹினூர் சிக்னல் அருகே லே டெம்ப்ஸ் போர்டு ஹோட்டல் உள்ளது. இந்த நட்சத்திர ஹோட்டல் 5 மாடி கட்டிடம் கொண்டது. இதனுள் தங்கும் விடுதி, உணவகம் மற்றும் மதுபான கூடம் ஆகியவை உள்ளன. இந்நிலையில் நேற்று இரவு (மே 11) திடீரென சுமார் 08.30 மணி அளவில் 4 வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ஹோட்டல் நிர்வாகத்தில் இருந்து உடனடியாக கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதற்குள் தீ மளமளவென பரவி எரியத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஹோட்டலில் இருந்த 40 அறைகளில் தங்கி இருந்தவர்கள் ஓடத் துவங்கினர். மேலும் இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்து வந்த மின்சார ஊழியர்கள் அப்பகுதியில் மின்சாரத்தை துண்டித்தனர். பிறகு 4 வது மாடியில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க வந்த மூன்று தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. இதற்கிடையில் 40 அறைகளில் தங்கி இருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேறிவிட்டனர்.
அதேநேரம் 5 வது மாடியில் உள்ள ஸ்பா மற்றும் கணக்குப் பிரிவில் தீ எரிந்து 20 அடி உயரத்திற்கு கரும்புகையுடன் காணப்பட்டது. இதனால் தொடர்ந்து இந்த ஹோட்டல் கட்டடம் முழுவதும் புகை மூட்டத்துடன் காணப்பட்டது. மேலும் 5 வது மாடியிலும் பலத்த சத்தத்துடன் தீ தொடர்ந்து எரிந்து கொண்டிருந்து. தீ விபத்து ஏற்பட்ட பகுதிக்குள் செல்வதற்கு மிகவும் குறுகலான பாதையாக இருந்ததால் தீயை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் கிட்டத்தட்ட 5 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து போராடி தீயை அணைத்தனர்.
இதனிடையே பற்றி எரிந்த தீயை அணைக்க தேவையான நீரை மாநகராட்சி லாரிகள் விரைவாக கொண்டு வாராததால் தீயணைப்பு வீரர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். அதேசமயம் இந்த நட்சத்திர ஹோட்டலில் தீ தடுப்பு உபகரணங்கள் ஏதும் இல்லாததால் தீயை அணைக்க பெரும் சிரமம் ஏற்பட்டதாகவும் தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். குறிப்பாக இந்த தீ விபத்தால் ஹோட்டலில் உள்ள 3, 4 மற்றும் 5 வது மாடியின் சுவர்கள் முழுவதும் சேதமடைந்து உள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து தில்லைநகர் போலீசார் மற்றும் கண்டோன்மென்ட் தீயணைப்பு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: அமராவதி ஆற்றில் மணல் திருட்டைத் தடுக்க கோரிய வழக்கு - ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு