ஒரு குறிப்பிட்ட சமுதாயம் குறித்து திருச்சி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் அவதூறாக பேசியதாக ஆடியோ சமீபத்தில் வெளியானது.
இதுதொடர்பாக காடுவெட்டி தியாகராஜன் மீது உப்பிலியபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் குறிப்பிட்ட சமுதாயத்தை அவதூறாக பேசிய காடுவெட்டி தியாகராஜன் கண்டித்து திருச்சி மாவட்ட அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் வெள்ளாளர் சமூக அமைப்புகளின் கூட்டம் திருச்சி தில்லை நகர் கிஆபெ விசுவநாதம் பள்ளியில் நடைபெற்றது. இதில் திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு, காடுவெட்டி தியாகராஜன் மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது காடுவெட்டி தியாகராஜன் பேசுகையில், இந்த ஆடியோ முழுமையாக வெளியிடப்படவில்லை. காவல்துறையில் பணிபுரியும் வெள்ளாளர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை காப்பாற்றவே அவ்வாறு பேசினேன். இதனால் கடந்த 10 நாள்களாக நிம்மதி இழந்துள்ளேன். தவறாக பேசியதை மன்னித்து தொடர்ந்து ஆதரவு தர வேண்டும் என கண்ணீர் விட்டு அழுதார். அவரை கூட்டத்தில் இருந்தவர்கள் தேற்றினர்.
தொடந்து பேசிய அவர், இன்னும் 3 அல்லது 4 நாள்களுக்குள் எனது மாவட்ட செயலாளர் பதவி போய்விடும் என்று பேசிக்கொள்கிறார்கள். இந்தப் பதவி முதன்மை செயலாளர் கே.என்.நேரு போட்ட பிச்சை. இந்தப் பதவி இல்லை என்றாலும் அவருக்கு ஆதரவாக இருப்பேன். நான் பேசியதால் பலர் மனது புண்பட்டு இருக்கும். இதற்கு இத்தோடு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது. என் பெயரை பயன்படுத்துபவர்களை கண்டிப்பதோடு, வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். இதனை யார் செய்தார்கள் என்று தொியும். இது குறித்து வழக்கு தொடுப்பேன்” எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து சோழிய வெள்ளாளர் சங்க மாநில துணை தலைவர் டாக்டர் செந்தில்குமார் பேசுகையில், “இப்பிரச்சினைக்கு இத்தோடு முற்றுபுள்ளி வைப்போம். இதனை அரசியல் ஆக்க வேண்டாம். இது குறித்து வழக்கு பதியப்பட்டு உள்ளது. எனவே இதற்கடுத்து இந்தப் பிரச்னைக்கு காவல் துறையே பொறுப்பு” என்றார்.
ஆலோசனை கூட்டத்தில் பேசிய காடுவெட்டி தியாகராஜன், தான் பேசியதாக கூறி மன்னிப்புக் கோரினார். ஆனால் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, ஆடியோவில் உள்ள குரல் தன்னுடையது கிடையாது என்பது போல் பேசினார். அதனால் கழக நிர்வாகிகள் மத்தியில் திடீர் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பயிர் காப்பீட்டில் பழைய முறையை அமல்படுத்துக - விவசாயிகள் கோரிக்கை!