திருச்சி சோமரசம்பேட்டையில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் மேம்படுத்தப்பட்ட வகுப்பறையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்துவைத்தார். பின்னர் பள்ளியின் உட்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்த அவரிடம் இரு மாணவிகள் சிலம்பம் சுற்றி காண்பித்தனர்
அவர்களை பாராட்டிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய் அமைச்சர், ”தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளின் கட்டமைப்பை ஆய்வு செய்ய வேண்டும் என முதலமைச்சர் கூறியுள்ளார். அதன் காரணமாக எங்கு செல்கின்றோமோ அங்குள்ள பள்ளிகளை ஆய்வு செய்கின்றோம். அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்கிறது. ஆசிரியர் பணிகளில் பணி நிரவல் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.கரோனா காரணமாக மே மாதம் நடைபெறும் பணி மாறுதல் கலந்தாய்வு இந்தாண்டு நடத்த முடியவில்லை.
கரோனா குறைந்து வரும் நிலையில் ஆசிரியர்களை பள்ளிக்கு வர வழைத்திருக்கிறோம். முதலமைச்சரின் ஆலோசனை பெற்று விரைவில் பணி மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும். அதன் பிறகு எந்த எந்த பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்கிறதோ அது சரி செய்யப்படும். கல்வி தொலைக்காட்சியை மேம்படுத்தவும் விரிவுப்படுத்தவும் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.
உயர்தர ஆய்வகங்கள் 6000க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருக்கிறது. உயர்நிலை பள்ளிகளிலும் மேல்நிலைப் பள்ளிகளிலும் கணினி ஆய்வகங்கள் கரோனா காரணமாக பயன்பாடு இல்லாமல் மூடப்பட்டுள்ளன.
அங்கு இருக்கும் கணினிகள் இயங்குகிறதா இல்லையா என்பதை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளோம். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடமிருந்து அதுகுறித்து அறிக்கை வந்த பின்பு இயங்காத கணினிகள் மாற்றப்படும். கூடுதல் மதிப்பெண் தேவைப்படும் மாணவர்கள் அக்டோபரில் தேர்வெழுதலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளந்து.
கரோனா கட்டுக்குள் வந்தால் மட்டுமே அப்போதைய சூழலை கருத்தில் கொண்டு அந்த தேர்வும் நடத்தப்படும். அவ்வாறு தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் கல்லூரியில் சேர்வதற்கு, முதலமைச்சரிடம் ஆலோசனை பெற்று சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். கரோனா சூழலை ஆராய்ந்து மருத்துவ வல்லுனர்களின் ஆலோசனை பெற்ற பின்பே தனித்தேர்வர்களுக்கு தேர்வு நடத்த முடிவெடுக்கப்படும்” என்றார்.