கரோனா வைரஸ் தாக்குதல் உலகத்தையே உலுக்கி வருகிறது. இந்தியாவிலும் இதன் கோரத்தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 2,902 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 69 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அண்மையில், டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தமிழ்நாட்டில் இருந்து டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதனடிப்படையில் திருச்சியில் இருந்து சென்றவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.
மருத்துவப் பரிசோதனைக்கு வந்த 28 பேரின் ரத்த மாதிரிகள் கடந்த 31ஆம் தேதி விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு கரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இதில் திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி, புறத்தாக்குடி, முசிறி, கரட்டாம்பட்டி, உறையூர் பாக்குபேட்டை, தில்லைநகர், ரஹ்மானியாபுரம், உறையூர், பாளையம் பஜார், பீமநகர், அண்ணா நகர், புத்தாநத்தம், மணப்பாறை, மண்ணச்சநல்லூர், தென்னூர் ஆழ்வார்தோப்பு, நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதி, அண்டகொண்டான், சமயபுரம் கூத்தூர், துவாக்குடி மலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 17 பேருக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இவர்கள் அனைவரும் தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருச்சியில் ஏற்கனவே துபாயில் இருந்து வந்த ஈரோட்டைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரோடு சேர்த்து திருச்சியில் மட்டும் தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியிருந்த பகுதிகள் அனைத்தும் காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இதையும் படிங்க: கேரளாவில் சாராயம் காய்ச்சிய ஏழு இளைஞர்கள் கைது!