திருச்சி மாவட்டம், திண்டுக்கல் சாலையில் கருமண்டபம் அருகே ஆக்ஸ்போர்ட் பொறியியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரி வளாத்தில் உள்ள சிமெண்ட் பெஞ்சில் மாணவர்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பது வழக்கம்.
அந்த வகையில், சில தினங்களாகவே இக்கல்லூரியில் பயிலும் 3ஆம் ஆண்டு மாணவர்கள் சிலர் அங்கு அமர்ந்து மாணவிகளை கிண்டல் செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை இறுதி ஆண்டு மாணவர்கள் 10 பேர் மாணவிகளை கிண்டல் செய்த 3ஆம் ஆண்டு மாணவர்களை கண்டித்துள்ளனர்.
இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது 3ஆம் ஆண்டு மாணவர்கள் 2 பேர் கையில் இருந்த பாட்டில்களால் இறுதி ஆண்டு மாணவர்களை தாக்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து இருதரப்பைச் சேர்ந்த 30 மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். அதில் இறுதி ஆண்டு மாணவர்கள் ஆறு பேருக்கு மண்டை உடைந்தது. 20க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து எடமலைப்பட்டி புதூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து 27 மாணவர்களை கைது செய்தனர். விசாரணையில் சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து பேசுவதற்கு தலைவர் பொறுப்பு வகிப்பது தொடர்பாக மாணவர்களிடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்தது தெரியவந்துள்ளது.
சென்னையில் ரூட் தல விவகாரம் நடந்து முடிந்து சில நாட்களே ஆன நிலையில் திருச்சி கல்லூரியில் மாணவர்கள் மோதிக்கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.