திருச்சி மேலகல்கண்டார் கோட்டையைச் சேர்ந்தவர் கார் ஓட்டுனர் முகமது அப்துல்லா. இவரது மகள் நிலோபர் நிஷா திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரியில் பி.எஸ்சி கணிதம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் பல்வேறு தடகளப் போட்டிகளிலும், நீச்சல் போட்டிகளிலும் கலந்துகொண்டு பல்வேறு பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வென்றுள்ளார்.
இந்நிலையில், இன்று திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள எஸ்டிபிஐ கட்சி அலுவலகத்தில் 0 முதல் 1,000 வரை தலைகீழாக சொல்லி புதிய உலக சாதனை படைத்துள்ளர். இதற்காக ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில், அதன் நிறுவனர் டிராகன் ஜெட்லீ சான்றிதழும், பதக்கமும் மாணவிக்கு வழங்கினார்.
இதுகுறித்து டிராகன் ஜெட்லி கூறுகையில், "இதற்கு முன்பு குழந்தைகள் பிரிவில்தான் இதுபோன்ற சாதனை படைத்துள்ளனர். தற்போது கல்லூரி மாணவிகள் பிரிவில் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. . நிலோபர் நிஷா 7 நிமிடம் 41 விநாடி 22 மைக்ரோ விநாடிகளில் இந்த சாதனையை செய்துள்ளார்" என்றார்.