திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ரூ.3.49 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
உக்கரை கிராமத்தில் 3.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்க உள்ள உயர் கோபுர மின்விளக்கு பணி, இ.பாதிரிப்பேட்டை முதல் உக்கரை சாலை வரை 49.98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி, குடிமராமத்து திட்டத்தின் கீழ் 6.12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குளம் தூர்வாரும் பணி, 5.38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான தடுப்பணை கட்டுமானப்பணி, எரக்குடி கிராமத்தில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் 1.70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வீடுகட்டுமானப்பணி, ரூ.1.80 லட்சம் மதிப்பீட்டில் முதலமைச்சரின் சூரிய ஒளியுடன் கூடியபசுமை வீடு கட்டப்படும் பணி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் கோட்டப்பாளையம் சின்னமாரியம்மன் கோயில் சாலை அமைக்கும் பணி, உப்பிலியபுரம் ஊராட்சியில் 2.75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டுமான பணி, வெங்கடாசலபுரம் ஊராட்சியில் அம்மா இளைஞர் விளையாட்டு மைதான திட்டத்தின் கீழ் 87 ஆயிரம் ரூபாய் செலவில் தயாராகும் இறகுப் பந்து மைதானப் பணி உள்ளிட்டவற்றையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, ஊரக வளர்ச்சிப் பணியாளர்களிடையே பேசியவர் குறித்த நேரத்திற்குள் இந்த கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, எரக்குடி ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் படிக்கும் குழந்தைகளின் வருகைப் பதிவேட்டை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி செயற்பொறியாளர் செல்வராஜ், உதவிப் பொறியாளர்கள் சுப்ரமணியன், பாலாஜி, உப்பிலியபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குணசேகரன் உள்பட பலர் இருந்தனர்.
இதையும் படிங்க : ஆன்மிக சீர்திருத்தவாதி அய்யா வைகுண்டர்!