திருச்சி: மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் நடத்தப்படும் கையெழுத்து இயக்கத்தை அக்கட்சியின் அகில இந்திய செயலாளரும், தமிழ்நாடு பொறுப்பாளருமான சஞ்சய் தத் இன்று திருச்சி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் தொடங்கிவைத்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "நாடாளுமன்றத்தில் எவ்வித விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களைக் கண்டித்து கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது.
இச்சட்டங்களின் மூலம் வேளாண்மை முற்றிலும் அழியக்கூடிய அபாயம் உள்ளதோடு வேளாண்மை முழுவதும் பெரு நிறுவனங்களின் கைகளுக்குச் சென்றுவிடும்.
புதிய வேளாண் திருத்தச்சட்டங்களைக் கண்டித்து நவம்பர் 1ஆம் தேதி முதல் 10ஆம் தேதிவரை தமிழ்நாட்டில் டிராக்டர் பேரணி நடத்தப்படும். ஏழைகள், விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு கொண்டுவரும் சட்டங்களை எதிர்க்காமல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைதிகாக்கிறார்.
எதிர்க்கட்சிகள் இச்சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்தக்கூடாது எனத் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றன. அதேயேற்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேளாண் சட்டங்களைத் தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் என அறிவிக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி காங்கிரஸ் சத்யாகிரக ஆர்ப்பாட்டம்