திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே உள்ள சீல்நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சின்னராஜ். அவரின் 17 வயது மகள் அரசுப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துவருகிறார்.
இந்த நிலையில் அவருக்கும் பேர்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த பழனிசாமி (22) என்பவருக்கும் புதன்கிழமை (ஜூன் 3) மணமகன் வீட்டில் திருமணம் நடந்தது. அப்போது மணமகனின் நண்பர்கள், புதுவீட்டிற்கு வருகைதந்த தம்பதியை, 'மருமகளே! மருமகளே! எங்க வீட்டு மருமகளே' என்ற திரைப்பட பாடலுக்கு டிக்-டாக் எடுத்து வெளியிட்டனர்.
டிக்-டாக்கால் இளைஞர் கைது அந்த டிக்-டாக் காணொலியை பார்த்த அப்பகுதி மக்கள், 17 வயது சிறுமிக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டுள்ளதாக 1098 எண்ணுக்குப் புகார் செய்துள்ளனர். அத்துடன் அந்தக் காணொலியும் இணைக்கப்பட்டு அனுப்பப்பட்டது.
அதனடிப்படையில் திருச்சி மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள் விசாரணை நடத்தி, குழந்தைத் திருமணம் என உறுதிசெய்தனர். அதையடுத்து மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இளைஞர் கைதுசெய்யப்பட்டார்.
மேலும் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த இருதரப்பு பெற்றோர்கள் உள்பட ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.