திருச்சி கொட்டப்பட்டு ஐஸ்வர்யா நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (55). இவர் பொன்மலை ரயில்வே பணிமனை ஊழியர். இவர், முன்னாள் கவுன்சிலரும், நடிகருமான திருச்சி பாலக்கரையைச் சேர்ந்த ஜெரால்டு என்பவரிடம் 2019ஆம் ஆண்டு 35 ஆயிரம் ரூபாய்
கடன் வாங்கியிருந்தார்.
தொடர்ந்து வட்டி கட்டிவந்த நிலையில் ஊரடங்கு காரணமாக சில மாதங்களாக ஆறுமுகம் வட்டி செலுத்தவில்லை. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு பணி முடிந்து திரும்பிய ஆறுமுகத்தை 3 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்றது.
ஆறுமுகத்தை கடத்திச் சென்ற அந்த கும்பல் அவரை அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. பணத்தை ஒரு சில தினங்களில் தருவதாக ஆறுமுகம் உறுதி அளித்ததை தொடர்ந்து அந்த கும்பல் அவரை விடுவித்தது.
அவர்களிடமிருந்து தப்பிவந்த ஆறுமுகம் இது குறித்து பொன்மலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் நடிகர் ஜெரால்டு, மரியம் நகரைச் சேர்ந்த ஜெஸ்டின் ஜெயராஜ், பாலக்கரை விசு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.