திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அன்பில் சுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. இது, ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி திருக்கோயிலின் உபகோயிலாகும். இக்கோயில் 108 வைணவ திருத்தலங்களில் நான்காவது தலமாக விளங்குகிறது. மேலும், இந்தக் கோயில் திருமழிசை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது.
குறிப்பாக, சோழப் பேரரசர் ராஜராஜ சோழனின் தந்தையான சோழச் சக்ரவர்த்தி சுந்தர சோழரின் முதன்மை அமைச்சராக இருந்தவர், அநிருத்தராய பிரம்மராயர். இவரது சொந்த ஊர்தான், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள இந்த அன்பில் கிராமம். அநிருத்தராய பிரம்மராயர் காலத்தில், இங்குள்ள சுந்தரராஜ பெருமாள் கோயில் பெரும் சிறப்புப் பெற்று விளங்கியுள்ளதை, கோயிலில் உள்ள கல்வெட்டுக்கள் சான்றளிக்கின்றன.
இந்நிலையில், இந்தக் கோயிலில் சுமார் 300 ஆண்டுகளுக்கு மேலாக திருத்தேரோட்ட விழா நடைபெறாமல் இருந்தது. தற்போது பொதுமக்கள் பங்களிப்புடன் சுமார் 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தேர் உருவாக்கப்பட்டு, கடந்த மாதம் 25 ஆம் தேதி வெள்ளோட்டம் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நேற்று (ஜூன் 4) வைகாசி விசாக பிரம்மோற்சவ தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.
விழாவின் ஒரு பகுதியாக கோயிலின் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில், புதிய கொடிமரம் நேற்றுமுன்தினம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து நேற்று காலை பிரம்மோற்சவம் கொடியேற்றம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அடுத்ததாக திருத்தேர்க்கான முகூர்த்த கால் நடப்பட்டு, நேற்று முதல் 13 நாள்கள் பிரம்மோற்சவ திருவிழா நடைபெறவுள்ளது. பிரம்மோற்சவ விழாவின் முக்கிய திருநாளான திருத்தேரோட்டம் வருகிற 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒட்டன்சத்திரத்தில் கோயில் திருவிழா: தேவராட்டத்தில் பங்கேற்ற அமைச்சர், எம்.பி!