திருச்சி கனரா வங்கி மண்டல அலுவலகத்தில் இன்று நடைபெற்ற வங்கி அலுவலர்கள், ஊழியர்கள் விழிப்புணர்வுக் கூட்டத்தில் கனரா வங்கி அலுவலர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மணிமாறன் கலந்துகொண்டனர்.
முன்னதாக அவர் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், 2017ஆம் ஆண்டு நவம்பர் முதல் வங்கி அலுவலர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. இது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
ஆனால், அரசு அளிக்கும் ஊதிய உயர்வில் எங்களுக்குச் சம்மதம் இல்லை. அதனால் தொடர்ந்து போராட்டம் நடைபெற்றுவருகிறது. ஏற்கனவே இரண்டு நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
அடுத்தகட்டமாக மார்ச் மாதத்தில் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஏ கிரேடு அலுவலர்களுக்கு இணையான ஊதியத்தை வங்கி ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கைவிடுக்கிறோம்.
நாளை ஊதிய உயர்வு தொடர்பாக இந்திய வங்கிகள் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதற்காக அனைத்து வங்கி அலுவலர்கள், சங்க நிர்வாகிகள், வங்கி ஊழியர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர். ஆனால், இந்திய வங்கிகள் கூட்டமைப்புக்கு பேச்சுவார்த்தை நடத்த மட்டுமே அதிகாரம் உள்ளது. ஊதிய உயர்வு தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் அதிகாரம் இல்லை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் சட்டப்பூர்வ அங்கீகாரத்தைப் பெற்றுவிட்டு இந்திய வங்கிகள் கூட்டமைப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட நாங்கள் வலியுறுத்துகிறோம். கடந்த மூன்று ஆண்டுகளாக வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு இல்லாததால் அலுவலர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். மூன்றாண்டுகள் ஊதிய உயர்வு வழங்காதது எவ்விதத்தில் நியாயம் என்பது தெரியவில்லை" என்றார்.
இதையும் படிங்க: பொதுத்துறை வங்கி இணைப்பு நிச்சயம் நடக்கும் - நிதியமைச்சர் திட்டவட்டம்