திருச்சி மாநகரில், கரோனா ஊரடங்கு அமல்படுத்தப்படுவதற்கு முன்பே, திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய டெர்மினல் கட்டுமான பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன. மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம் இந்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்காக மகராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து தொழிலாளர்களை வரவழைத்து கட்டுமான பணிகள் துரிதகதியில் நடைபெற்று வந்தன. இந்தத் தொழிலாளர்கள் விமான நிலையத்தின் அருகிலேயே குடில்கள் அமைத்து தங்கி, சமைத்து சாப்பிட்டு, பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கட்டுமான பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து இங்கு பணியாற்றி வந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமலும், வேலையிழந்தும் தவித்து வருகின்றனர். இவர்களுக்கு விமான நிலைய ஆணையம் சார்பில் சில நாட்கள் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அதுவும் நிறுத்தப்பட்டதால் வயிற்றுப் பிழைப்புக்கே அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே, தங்களை சொந்த மாநிலத்துக்கு அனுப்பக்கோரி தொடர்ந்து வலியுறுத்தியும் இவர்களது கோரிக்கைகள் கவனிக்கப்படாததால், தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றாகத் திரண்டு ஆட்சியர் அலுவலகம் நோக்கி இன்று பேரணியாக புறப்பட்டனர். இதை அறிந்த காவல் துறையினர் சுப்பிரமணியபுரம் பகுதியில் தொழிலாளர்களை வழிமறித்து, பேச்சுவார்த்தை நடத்தி இவர்களில் இருந்து மூன்று பேரை மட்டும் ஆட்சியரை சந்திக்க அழைத்துச் சென்றனர்.
இதர நபர்களை விமான நிலையப் பகுதிக்கு அழைத்துச் சென்று, உணவுப் பொருட்கள் வழங்க காவல்துறையினர் ஏற்பாடுகளை செய்தனர். ஊரடங்கின் மத்தியில் திருச்சி சாலைகளில் திடீரென வடமாநில தொழிலாளர்கள் ஒன்று திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க : திருச்சியில் ஊரடங்கு காலத்தில் 10 குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்!