பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் சுப்பிரமணியன் இன்று திருச்சி பத்திரிகையாளர் சங்கத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “புதிய கல்வி கொள்கைக்கு ஆதரவாக ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நடத்தப்படும். புதிய கல்வி கொள்கையை விளக்கி மாநிலம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
தமிழ்நாட்டை இதுவரை ஆண்ட கட்சிகளால் கல்வியின் தரம் குறைந்து விட்டது. நாட்டின் பாரம்பரியத்தை காக்கக் கூடிய புதிய கல்விக் கொள்கைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. நாட்டின் அனைத்து மொழிகளுக்கும் சம உரிமை கொடுக்கக் கூடிய மும்மொழி கொள்கை புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளது.
இதன் மூலம் 2030ஆம் ஆண்டு நாட்டின் ஒட்டுமொத்த மக்களுக்கும் கல்வி கிடைக்கும். பன்முகத் தன்மை கொண்ட இந்தியா இதன் மூலம் முன்னேற வழி ஏற்படும். தாய் மொழிக் கல்விக்கு எந்தத் தடையும் இருக்காது.
மாநில அரசுகள், கட்சிகள் அரசியலுக்காக புதிய கல்வி கொள்கையை எதிர்ப்பதை கைவிட வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இரு மொழிக் கொள்கை தான் பின்பற்றப்படும் எனக் கூறியதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
கனிமொழிக்கு இந்தி தொியாது என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. குடியரசு துணைத் தலைவர் இந்தியில் பேதியதை மொழி பெயர்த்தவர் கனிமொழி. அரசியலுக்கு தமிழ், தொழிலுக்கு இந்தி என்ற ஸ்டாலின் குடும்பத்தின் இந்தப் போக்கு கண்டிக்கத்தக்கது.
சென்னை விமான நிலையத்தில் இந்தி தெரியவில்லை என கனிமொழி கூறியதற்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.