திருச்சி: மேட்டூர் அணையில் தேவைக்கு தண்ணீர் இல்லை. மேட்டூர் அணையை நம்பி குறுவை சாகுபடி செய்த டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என பாரதிய கிசான் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில், சங்கத்தின் மாநில செயலாளர் வீரசேகரன் தெரிவித்துள்ளார்.
பாரதிய கிசான் சங்க மாநில செயற்குழு கூட்டமானது திருச்சி ஶ்ரீரங்கம் பகுதியில் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். மேலும், நிகழ்ச்சியில் நிர்வாகிகள் கையேடு, மூத்த நிர்வாகி ஸ்ரீ கணேசன் வெளியிட மாநில தலைவர் பாண்டியன் பெற்றுக் கொண்டார்.
அதனைத்தொடர்ந்து, பாரதிய கிசான் சங்க மாநில செயலாளர் வீரசேகரன் செய்தியாளர்களைச் சந்தித்த பேசியதாவது, “தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் தி.மு க. அரசு நெல் குவிண்டாலுக்கு குறைந்த பட்ச விலை 3,000 ரூபாய் தருவதாக தேர்தல் வாக்கு உறுதி அளித்தது.
ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு, மூன்று அறிவிப்புகள் வந்து விட்ட நிலையிலும், தேர்தல் வாக்குறுதியை முழுமையாக செயல்படுத்தவில்லை. மேலும், இந்த ஆண்டு மேட்டூர் அணையை நம்பி குறுவை சாகுபடி செய்த டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். என்வே, தமிழக விவசாயிகளின் மீது அக்கறை செலுத்தி குறைந்தபட்ச விலையை தர வேண்டும் என்று கூறினார்.
இதையும் படிங்க: "என்ன அவமானப்படுத்துறீங்களா?" - ஆலோசனை கூட்டத்தில் கம்யூ. உறுப்பினரின் கணீர் குரல்!
தொடர்ந்து பேசிய அவர், பாசனம் பெறும் டெல்டா மாவட்டங்களை தவிர 20 மாவட்டங்கள் மேட்டூர் அணையின் நீரை, குடிநீர் ஆதாரமாக கொண்டுள்ளன. அந்த வகையில், நாள் ஒன்றுக்கு ஒரு டி.எம்.சி. தண்ணீர் தேவை உள்ளது. ஆனால் மேட்டூர் அணையில் மொத்தமாகவே 20 டி.எம்.சி. தண்ணீர் தான் இருப்பு உள்ளது.
இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பொய்த்து விட்ட நிலையில், சம்பா சாகுபடிக்கான காலக்கட்டத்தில் விவசாயிகள் உள்ளனர். குறுவை சாகுபடியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாயும், வாழை மற்றும் கரும்பு சாகுபடியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 50 ஆயிரம் ரூபாயும், தென்னை, மா ஆகியவை சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 25 ஆயிரம் ரூபாயும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறினார்.
மேலும், டெல்டா மாவட்டங்களில் பொதுவாக நான்கு லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படும். அவற்றில் ஒன்றரை முதல் 2 லட்சம் ஏக்கர் வரையிலான நிலங்கள் போர்வெல் மற்றும் கிணற்றுப் பாசனத்தை நம்பி விவசாயம் செய்யப்படுகிறது. இதனால் பாதி அளவு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
இதையும் படிங்க: பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி.. ரூ.96.17 லட்சம் காணிக்கை வசூல்!