திருச்சி அருகே மத்திய பாதுகாப்புத் துறையின் துப்பாக்கி தொழிற்சாலை செயல்பட்டுவருகிறது. இந்தத் துப்பாக்கித் தொழிற்சாலைக்கு அருகே பிரபல வங்கிகளுக்குச் சொந்தமான ஐந்துக்கும் மேற்பட்ட ஏடிஎம்கள் இயங்கிவருகின்றன.
இதில் பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் ஒன்று இயங்கிவருகிறது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இந்த ஏடிஎம் அறைக்குள் நுழைந்து இயந்திரத்தை உடைத்துள்ளார்.
சத்தம் அதிகமாகக் கேட்டதால் அருகில் தூங்கிய ஒரு நபர் விழித்து 'என்ன சத்தம்' என்று கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த நபர் அவசர அவசரமாக அங்கிருந்து ஓடியுள்ளார். அவர் கறுப்பு நிற கோட் அணிந்து வந்துள்ளார்.
தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நவல்பட்டு காவல் துறையினர், அங்கு ஆய்வு செய்தனர். அப்போது ஏடிஎம் இயந்திரத்தை சுற்றி மிளகாய்ப்பொடி தூவப்பட்டிருந்தது. அதேபோல், ஏடிஎம் உள்ளே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவை கறுப்பு மை கொண்டு மறைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு காவல் துறையின் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு இயந்திரத்தில் பதிவாகியிருந்த கைரேகைகள் சேகரிக்கப்பட்டன. மேலும், இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க : கொலை - கொள்ளை வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை!