திருநெல்வேலி: பாளையங்கோட்டை மறைமாவட்ட பொன்விழா நிறைவு கொண்டாட்ட நிகழ்வு பாளையங்கோட்டை தூய சவேரியார் பள்ளி மைதானத்தில் இன்று (செப்.11), திருத்தந்தைகளின் இந்திய நேபாளத் தூதுவர் பேராயர் லெயோபோல்தோ ஜிரெல்ஜி தலைமையில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கலந்துகொண்டார்.
இந்த விழாவின் தொடக்கமாக பொன்விழா மலர் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய அப்பாவு, “சனாதனம் என்பது இந்துக்களுக்கு எதிரானதாகும், 4 விழுக்காடு பேர் மட்டுமே இதன் மூலம் பயன்பெற்று வருகின்றனர். மீதமுள்ள 96 விழுக்காடு பேர் அடிமை வாழ்க்கை தான் வாழ்கின்றனர். 1935ஆம் ஆண்டுக்குப்பின் லார்டு மெக்காலே பிரபுதான் அனைவருக்கும் சமமான கல்வியை கொண்டு வந்தார்.
இந்த நாட்டில் சமூக நீதிக்கு முதலில் வித்திட்டவர்கள் அருட்தந்தையர்கள்தான். ஏசு சபைகள் மூடக்கம், மணிப்பூரில் 300 தேவாலயங்கள் இடிப்பு இதற்கு காரணம் ஏசு சபையினர் அனைவருக்கும் கல்வி கொடுப்பதுதான். இதனை தடுப்பதுதான் சனாதனம். இதனால்தான் தமிழ்நாட்டில் முதலமைச்சர் உள்பட அனைவரும் எதிர்க்கின்றனர்.
அய்யா வைகுண்டர் சாதிய, மதரீதியான அடக்கு முறைகளை எதிர்த்து 800 ஆண்டுகளுக்கு முன்னரே குரல் கொடுத்தார், உன் மனச்சாட்சியே கடவுள் என கூறினார், சனாதனத்தை எதிர்த்தார். தமிழ்நாட்டில் சட்டத்தின் படி ஆட்சி நடக்கிறது, இங்கு திராவிட மாடல் ஆட்சி நடப்பதால்தான் அனைத்து தரப்பினரும் பாதுகாப்பாக வாழமுடிகிறது. எல்லோருக்கும் எல்லாம் என கல்வி பொருளாதாரம் ஆகியவற்றில் நாம் இன்று வளர்ச்சி அடைந்துள்ளதற்கு காரணம் அருட்தந்தையர்களின் சேவைதான்” என கூறினார்.
முன்னதாக அய்யா வழி மக்கள் இயக்க பாலபிரஜாபதி அடிகளார் பேசுகையில், “நெல்லையில் ஆற்றின் அந்தப்பக்கம் ஏற்றத்தாழ்வு, சாதிய ஆதிக்கம் நிறைந்து காணப்பட்டது, ஆற்றின் இந்த பக்கம் பாளையங்கோட்டையில் கல்வி நிறுவனங்கள் நிறைந்து மனித குல நாகரீகத்தையும், மாண்பையும் தலை நிமிரச் செய்த பகுதியாக விளங்கியது. இனி நாம் சிறுபான்மையினர் என கூறக்கூடாது, அனைவரும் ஒன்றிணைந்தால் பெரும்பான்மையினர்தான். அடிமை சானத்திற்கு ஆளாகிவிடக்கூடாது, மனுவாதி வந்துவிடக் கூடாது ஆகையால் மதத்தையும் தாண்டி ஒன்றிணைந்து பெரும்பான்மையினராக நிற்கும்” என கூறினார்.
குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் பாஜகவின் மாநிலத் துணைத் தலைவரும் பாஜக சட்டப்பேரவைக் குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். எனவே சபாநாயகர் அப்பாவு நயினார் நாகேந்திரனை மேடையில் வைத்துக் கொண்டே சனதானம் குறித்து பேசிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக பாளை மறைமாவட்டத்தின் சிறப்புக்களை கூறும் வகையில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதையும் படிங்க: இரவு நேர பயணங்களை தவிர்க்க வேண்டும் - விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த பின் எ.வ.வேலு பேட்டி!