ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியின் பெண்களின் 87 கிலோ பிரிவில் புதுக்கோட்டை மாவட்டம் நெம்மேலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வீராங்கனை அனுராதா கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.
தஞ்சை மாவட்டம் தோகூர் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் அனுராதா, தங்கப்பதக்கம் வென்றபின் சொந்த ஊர் செல்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்துசேர்ந்தார். அப்போது கிராம மக்கள், வீரர், வீராங்கனைகள், பளு தூக்கும் கழக நிர்வாகிகள், பயிற்சியாளர்கள், உறவினர்கள், குடும்பத்தினர் என பலரும் அனுராதாவுக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அனுராதா, ”சர்வதேச பளுதூக்கும் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் கிடைத்திருப்பது இதுதான் முதல்முறை. சர்வதேச அளவில் கலந்துகொள்ளும் அளவிற்கு நம்மிடம் வீரர்கள் இருந்தும் அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லை. பயிற்சிக்கான உபகரணங்கள் சரியாக கிடைப்பதில்லை. பளுதூக்கும் போட்டி என்றால் வேலூரைத்தான் அனைவரும் கவனம் செலுத்துகின்றனர். தென்மாவட்டங்களில் யாரும் கவனம் செலுத்துவது கிடையாது.
மிகவும் பின் தங்கிய கிராமத்தில் இருக்கும் நான், எனது தந்தையை சிறு வயதிலேயே இழந்தேன். என் அண்ணன்தான் எனது வெற்றிக்கு உதவினார். 2016ம் ஆண்டில் விளையாட்டு ஒதுக்கீட்டில் சப்-இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்தேன். பின் அனைத்து செலவிற்கும் காவல்துறை உதவி செய்தது. பளு தூக்கும் போட்டிகளில் கலந்து கொள்ள பெண்களை ஊக்குவிப்பது குறைவாக உள்ளது. பெண்களால் பளு தூக்கும் போட்டியில் சாதிக்க முடியும். என்னைபோல் பல பெண்கள் பதக்கம் வாங்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை. 2024ஆம் ஆண்டு நடைபெறும் காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே எனது லட்சியம். அதில் வென்றுவிட்டேன் என்றால் அடுத்து ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு நாட்டிற்காக பதக்கம் வெல்வதே எனது லட்சியம். அதை கண்டிப்பாக நிறைவேற்றுவேன்” என்றார்.