திருச்சி: தமிழ்நாட்டில் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் அண்ணாமலை, திருச்சியில் பாஜக சார்பில் போட்டியிடும் 60 வேட்பாளர்களை ஆதரித்து தனது தேர்தல் பரப்புரையை தொடங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், "தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்று எட்டு மாதங்கள் முடிந்திருக்கிறது. 80 ஆண்டு காலங்கள் ஒரு மனிதர் ஆட்சி செய்தால் எப்படி சலிப்பு, கோபம் வருமோ, அது இந்த எட்டு மாதங்களில் வந்திருக்கிறது. பொங்கல் பரிசுத் தொகுப்பில் இரண்டு கோடியே 15 லட்ச ரூபாய் வாங்கி, 120 கோடி ரூபாய் கமிஷன் அடித்திருக்கிறது இந்த விடியாத அரசு.
தமிழ்நாட்டை தேடித்தேடி பிரதமர் ஸ்மார்ட் சிட்டி திட்டம் கொடுத்தார். எந்த வேலையும் நடந்த மாதிரி தெரியவில்லை. நீட் ஆதரவுக்கு எதிராக பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுபோட்டுள்ளனர். தமிழ்நாட்டிற்கு என 11 மருத்துவக் கல்லூரியை பிரதமர் கொடுத்துள்ளார்.
திமுக எதைக் கையில் எடுத்தாலும் இரண்டு வாரம் மட்டும்தான் பேசுவார்கள். நீட் தேர்வு மூலம்தான் பல பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவப் படிப்பு பயிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 'பாரதம் 75' என்ற தலைப்பில் வடிவமைக்கப்பட்ட அலங்கார ஊர்தி நிராகரிப்புக்கு திமுகவின் கையாலாகாத தனமே காரணம்.
கதை, திரைக்கதை, வசனத்தில்தான் இந்த ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பரப்புரை களத்திற்கு வருவதற்குப் பயப்படுகிறார். இதுவரையிலான சரித்திரத்தில், களத்திற்கு வந்து முதலமைச்சர் ஓட்டு கேட்காத முதல் தேர்தல் இதுதான். ராகுல் காந்தி சொன்ன நேரம் தமிழ்நாட்டில் பாஜக அபரிமிதமாக வளர்ச்சி அடைந்துவருகிறது" என்றார்.
இதையும் படிங்க: பொங்கல் தொகுப்பு வழங்கியதில் உலக மகா ஊழல் - அண்ணாமலை