திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பில் அங்கன்வாடி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி மையத்தில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். அங்கன்வாடி மையத்திற்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர் வசதி, மின்சார வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவுமின்றி குழந்தைகள் சிரமப்பட்டுகிறார்கள்.
இது குறித்து ஊராட்சி செயலரிடம் பலமுறை எடுத்துக் கூறியும் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. பஞ்சாயத்து அலுவலகம் அருகில் இருந்தும் அங்கன்வாடி மையத்தை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், உள்ளூர் அரசியல் கட்சி பிரமுகர்கள் என யாரும் முன்வந்து சீர் செய்ய முயற்சி செய்யவில்லை என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
தற்போது நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டால் குழந்தைகள் இயற்கை உபாதைகளைக் கழிக்க தண்ணீர் வசதி இல்லாமல் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர் என்று குழந்தைகளின் பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து அங்கன்வாடி மையத்திற்கு அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தரவேண்டும் என அப்பகுதி பொதுமக்களும், சமூக நல ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.