திருச்சி: பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அனைத்து இந்திய பயங்கரவாத எதிர்ப்பு முன்னணி தலைவர் மணிந்தர் ஜீத் சிங் பிட்டா மார்ச் 23ஆம் தேதி 4 நாள்கள் ஆன்மிக பயணமாகத் தமிழ்நாடு வந்தார்.
இவருக்குத் தீவிரவாதிகளால் ஆபத்து இருப்பதால் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு முறை தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு உள்ளார்.
இதனையடுத்து, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த அவர், நேற்று (மார்ச் 24) காலை திருவனைக்காவல், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
இதனைத்தொடர்ந்து சமயபுரம் தென் சீரடி சாய்பாபா கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் மாலை கார் மூலம் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சென்றார்.
அங்கு இரண்டு நாள்கள் தங்கும் அவர் பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். அதன் பின் 26ஆம் தேதி இரவு கும்பகோணத்தில் இருந்து திருச்சிக்கு வந்து தனியார் விடுதியில் தங்கிவிட்டு, 27ஆம் தேதி விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.
திருச்சிக்கு அனைத்து இந்திய பயங்கரவாத எதிர்ப்பு முன்னணி தலைவர் மணிந்தர் ஜீத் சிங் பிட்டா வருவதையொட்டி அவர் தங்கும் இடம் மட்டும் அவர் செல்லும் வழித் தடங்கள் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது, "இந்தியா எப்போதும் பாதுகாப்பாக இருக்க வேண்டும், வலிமையாக இருக்க வேண்டும்.
இந்திய அரசின் செயல்பாடுகள் மிகவும் பாராட்டத்தக்க வகையில் இருக்கின்றன. ராம ஜென்ம பூமி முடிந்துவிட்டது, அடுத்ததாக வாரணாசியும், மதுராவும் அதைச் செயல்படுத்துவதற்காக முழு கவனமும் அங்கு இருக்கிறது.
பிரதமருக்கும், நாட்டிற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 45 வருடமாக இசட் பிளஸ் பாதுகாப்பு இருக்கிறேன். தமிழ்நாட்டில் உள்ள கோயில்களுக்கு 35 முறைக்கு மேல் வந்திருக்கிறேன்.
தமிழ்நாட்டிற்கு வரும் போதெல்லாம் தமிழ்நாடு அரசு ஒத்துழைப்பு கொடுத்து பாதுகாப்பு கொடுத்திருக்கிறது. தமிழ்நாடு அரசு நல்ல முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துகொடுத்துள்ளது” என்றார்.