திருச்சி: திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட திருவெறும்பூர் அருகே காட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இன்னும் அது முழுமையாக முடிவடையவில்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள சாலைகள் தோண்டப்பட்டு நிலையில் மிகவும் மோசமடைந்துள்ளன. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள், கடும் போக்குவரத்து நெரிசலால், சுமார் 10 ஆண்டுகளாக பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.
இந்த நிலையில் அதில் ஒரு சில இடங்களில் பணி முடிந்து விட்டது எனக் கூறி புதிதாக தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அப்படி திருச்சி மாநகராட்சி 39 வது வார்டுக்கு உட்பட்ட காட்டூர் பாலாஜி நகர் பகுதியில் 28 தெருக்கள் உள்ளன. இந்த தெருக்களில் போடப்பட்ட தார் சாலை தரம் இல்லாமல் போடப்பட்டதால், போட்ட 10 நாட்களில் பெயர்ந்து மிகவும் மோசமாகி உள்ளது.
10 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் அவதிப்பட்டு வந்த மக்கள் புதிதாக தார் சாலைகள் போடப்பட்ட உள்ளதை நினைத்து சந்தோசமும் நிம்மதி அடையும் முன்பு, சாலைகள் போடப்பட்ட 10 நாட்களில் பெயர்ந்தது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், "முன்பு சேரும் சகதியில் நடந்து கொண்டிருந்தோம். இப்போது குண்டு குழியில் நடந்து கொண்டிருக்கின்றோம். இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும், அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
திருச்சி மேயர் மற்றும் கோட்ட தலைவரை அழைத்து வந்து காட்டினோம். அவர்களும் மேற்பார்வைக்காக தரமற்ற முறையில் போடப்பட்டுள்ளது. உடனே சாலைகளை சீரமைக்க வேண்டும் என அதிகாரிகளிடம் எச்சரிக்கை விடுத்துச் சென்றனர். ஆனால் இன்று வரை எந்த ஒரு பணியும் நடைபெறவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தரமான சாலை அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதுடன் தரமற்ற சாலை அமைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து 39 வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் ரெக்ஸ் அவர்களிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, "கடந்த ஆண்டு வரை இங்கு வசிக்கக்கூடிய பொதுமக்கள் சாலை வசதி இல்லாமல், சேரும் சகதியிலேயே நடந்து சென்றனர். இதற்கு தீர்வு காணும் வகையிலும், பொதுமக்களின் குறையை தீர்க்கும் வகையிலும், சாலை அமைத்து கொடுத்துள்ளோம். அதை கருத வேண்டுமே தவிர்த்து தரமற்ற சாலை என்று குறை கூறக்கூடாது" என்று மெத்தன போக்குடன் பதில் அளித்தார்.
இதையும் படிங்க: "தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும்" - வெளியுறவு இணை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!