திருச்சி: அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் வெற்றி கண்ட எடப்பாடி பழனிசாமி, கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்களை அதிரடியாக நீக்கினார். இதனால் தனது ஆதரவாளர்களுடன் இணைந்து மீண்டும் அதிமுகவை கைப்பற்றும் முனைப்பில் ஓபிஎஸ் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தன்னுடைய பலத்தை நிரூபிப்பேன் என்று கூறி, திருச்சியில் வருகிற 24 ஆம் தேதி அதிமுக முப்பெரும் விழா மாநாடு நடத்தப்படும் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்து இருந்தார். மேலும் கடந்த 10 ஆம் தேதி திருச்சியில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இதற்கான ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து, திருச்சி பொன்மலையில் உள்ள ஜி கார்னர் ரயில்வே மைதானத்தில் மாநாடு நடத்துவதற்கான பணிகளை தற்போது ஓபிஎஸ் அணியினர் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கான கால்கோள் நடும் விழா நடைபெற்றது. இதில் வெல்லமண்டி நடராஜன், கு.ப கிருஷ்ணன் உள்ளிட்ட ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், திருச்சியில் வரும் 24 ஆம் தேதி ஓபிஎஸ் தலைமையில் நடைபெற இருக்கும் மாநாட்டிற்கு லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் வருவார்கள் என்றும் திருச்சியில் நடைபெறும் மாநாட்டிற்கு பிறகு எடப்பாடி தரப்பினர் சிதறி சின்னாபின்னம் ஆகிவிடுவார்கள் என்றும் ஓபிஎஸ் தரப்பில் தெரிவித்து வருகின்றனர்.
திருச்சி மாநாடு ஓ.பன்னீர்செல்வத்திற்கு திருப்புமுனையாக அமையும் என்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் தான் ஓபிஎஸ்க்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.
இந்த அங்கீகாரத்தால் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்துள்ளது. இதனால், ஓபிஎஸ் தரப்புக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தனது அரசியல் நகர்வில் புதிய அத்தியாயம் எனக் கருதும் திருச்சி மாநாட்டிலும் ஓபிஎஸ்க்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதால், ஓபிஎஸ் தரப்பினர் அதிமுக பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடாது என எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.
இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் பேசியதாவது, "வரலாற்று சிறப்பு மிக்க திருச்சியில் அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்ச்செல்வம் தலைமையில் மாநாடு குறிப்பிட்ட தேதியில் நடைபெறும் என தெரிவித்துக் கொள்கிறேன். எங்களுக்கு பிடிக்கதாக சிலர் இந்த மாநாடு நடக்காது என கூறுகிறார்கள்.
மேலும் எம்ஜிஆர் அவர்கள் கொடுத்த கொடி இது, ஆகையால் அவர் கொடுத்த கொடியை பயன்படுத்துவதை தடுக்க எவருக்கும் உரிமை இல்லை. எந்த நீதிமன்றமும் கொடியை பயன்படுத்த தடை விதிக்கவில்லை, குறிப்பாக இந்த கொடியின் கீழ் தான் எங்களது கோட்டை கொத்தளம் அமைக்கப்படும். இந்த மாநாட்டில் மக்களின் எதிர்காலத்தை, தமிழ்நாட்டின் எதிர்காலைத்தை தீர்மானிக்க ஓ.பன்னீர்செல்வம் தீர்மானம் எடுக்க உள்ளார்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "நாங்கள் கட்சியை தொடங்க என்ன காரணம்?, நாங்கள் ஏன் புதிய கட்சி தொடங்க வேண்டும்?. எங்களுக்கு என்று கட்சியை தலைவர் எம்.ஜி.ஆர் கொடுத்துவிட்டு சென்றுள்ளார். இந்த கட்சியை காப்பாற்றும் வல்லமை எங்களுக்கு உள்ளது. நாங்கள் புதிய கட்சியை தொடங்க அவசியம் இல்லை. நாங்கள் அதிமுக கொடியை பயன்படுத்துவோம். இதனால் ஓராயிரம் வழக்குகள் தொடர்ந்தாலும் அதை நாங்கள் சந்திக்கத் தயார்" என கு.ப.கிருஷ்ணன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதிமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில் ஊழல் - இந்திய தணிக்கை துறை!