திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டம் நேற்று (செப். 13) ஸ்ரீரங்கம் ரெங்கபவனம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அமைச்சர் வளர்மதி, பாசறை மாநில செயலாளர் பரமசிவம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டம் தொடங்கியதும் மண்டபத்திற்குள் மஞ்சள் நிற கொடியுடன் புகுந்த கும்பல் திடீரென மேடையை நோக்கி சென்று, சரியான நபர்களுக்கு பதவி வழங்கவில்லை எனக்கூறி வாக்குவாதம் செய்தனர். அங்கிருந்த நாற்காலிகளை எடுத்து தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் கூட்டத்தில் இருந்தவர்கள் சிதறி ஓடினர். அடிதடியில் ஈடுபட்டவர்கள் மேடையை நோக்கி கூச்சலிட்டபடி வந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்தனர். ரகளையில் ஈடுபட்டவர்கள் வெளியேறிய பின்னர் கூட்டம் நடந்தது.
அதிமுக அந்தநல்லூர் ஒன்றிய பகுதியைச் சேர்ந்த கண்ணதாசன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இந்த ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது. ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு பதவி வழங்காமல் ஒதுக்குவதாக இவர்கள் குற்றஞ்சாட்டி ரகளையில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பகுதி செயலாளர்கள் டைமண்ட் திருப்பதி மற்றும் சுந்தரராஜன் ஆகியோர் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து கண்ணதாசன் உள்பட 106 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். திருமண மண்டபத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:அரசு விழாவில் அதிமுக அமைச்சர்களுடன் திமுக முன்னாள் அமைச்சர் பங்கேற்றதால் சர்ச்சை!