திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள பன்னப்பட்டி, மலையடிப் பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் களஆய்வு மேற்கொண்ட பெண் அலுவலர் ஒருவர் 100 நாள் பணியில் ஈடுபட்டிருந்த பட்டியலின மக்களைத் தரக்குறைவாக பேசியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஆவாரம்பட்டியைச் சேர்ந்த பட்டியலின மக்கள் 30க்கும் மேற்பட்டோர் பெண் அலுவலரைக் கண்டித்து மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலக நுழைவாயிலில் தர்ணாவில் ஈடுபட்டனர்.
அப்போது பெண் அலுவலருக்கு எதிராக கண்டன முழக்கத்தை எழுப்பி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தர்ணாவில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்ல வலியுறுத்தினர். கலைந்து செல்ல மறுத்த ஆவாரம்பட்டி மக்கள், 100 நாள் பணி செய்த எங்களை பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக தரக்குறைவாகவும், ஆபாசமாகவும் பேசிய ஊராட்சி ஒன்றிய பெண் அலுவலர் வந்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று காவல்துறையினரிடம் முறையிட்டனர்.
மேலும், சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த போராட்டத்தை எந்த அலுவலரும் கண்டுகொள்ளாததால் பொதுமக்களிடையே வெறுப்பை உண்டாக்கியது. இதனையடுத்து, சம்பந்தப்பட்ட பெண் அலுவலர் நாளை நேரில் வந்து தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றால் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் குடும்ப அட்டைகளை திரும்ப ஒப்படைப்போம் என்று எச்சரித்து கலைந்து சென்றனர்.