திருச்சி: திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் ஆயில் மில் பர்மா காலனியைச் சேர்ந்தவர், டிரைவர் ராஜா. இவரது மகன் ஜெகன்நாத்(10). இவர் காட்டூரில் உள்ள தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் விடுமுறை தினம் என்பதால் இன்று (ஜன.8) ஜெகன்நாத் தனது நண்பர்களுடன் பர்மா காலனியில் உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான கிணற்றில் மீன் பிடிக்கச் சென்றுள்ளார். அப்போது, அவரது செருப்பு ஒன்று கிணற்றுக்குள் தவறி விழவே, அதனை எடுக்கும் முயற்சியில் கிணற்றில் இறங்கிய சிறுவன் ஜெகன்நாத் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தண்ணீரில் மூழ்கிய சிறுவனை சடலமாக மீட்டனர். இதுகுறித்து தகவலறிந்த திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுவனின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் உள்ள கிணற்றில் சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாநகராட்சி இந்த கிணற்றை சுற்றி மூலிகைப் பூங்கா அமைத்து பராமரித்து வந்தநிலையில், நாளடைவில் போதுமான பராமரிப்பின்றி இருப்பதால் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது.
மேலும் கிணற்றின் மேற்பரப்பில் வலை அமைக்கப்படாமல் இருப்பதால் விடுமுறை நாட்களில் இதுபோன்று, சிறுவர்கள் அங்கு விளையாடி மீன்பிடித்து வருவது தொடர்கதை ஆகி உள்ளது. இனி வரும் காலங்களில் பூங்காவை முறையாகப் பராமரிப்பு செய்து, கிணற்றின் மேற்பரப்பில் வலை அமைத்து, அதனை மாநகராட்சி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: "திருவள்ளுவருக்கு உருவமே இல்லை" - நடிகர் சிவகுமார்