கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட வரதனூர், சோழனூர், கோவில்பாளையம், தேவராயபுரம், கோதவாடி, கக்கடவு, காணியாலாம் பாளையம் ஆகிய ஊராட்சிகளில் ரூ. 2 கோடி செலவில் புதிய தார் சாலை அமைத்தல், புதிய குடிநீர் திட்ட பணிகள், நீர் தேக்க தடுப்பணைகள், அங்கன்வாடி கட்டடம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக பூமி பூஜை தொடக்க விழா இன்று (செப்டம்பர் 12) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பணிகளை தொடங்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய அவர், "மத்திய அரசின் சார்பாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உதவித்தொகையில் முறைகேடு நடந்திருக்கிறது என்பதை உணர்ந்து நமது முதலமைச்சர் அது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பில் முறையான விசாரணைகளை நடைபெற்று வருகின்றன.
இதற்கு ஆளுகின்ற கட்சியோ, தமிழ்நாடு அரசோ பொறுப்பு கிடையாது. அலுவலர்கள் தான் இதற்கு பொறுப்பு. அதிமுக கூட்டணி வருகின்ற 2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிட்டு அறுதிபெரும்பான்மையுடன் வெற்றி பெறும். அதிமுகவின் இப்போதைய கூட்டணியில் தேமுதிக நீடிப்பது குறித்த முடிவை தலைமைக் கழகம் தான் முடிவுசெய்யும். இப்போதைக்கு தேமுதிக எங்கள் கூட்டணியில் தான் உள்ளது.
புதிய கல்விக் கொள்கையை பொறுத்தமட்டில், பெரியார், அண்ணா, எம்.ஜி. ஆர், ஜெயலலிதா வழியில் நின்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நல்ல முடிவை எடுத்துள்ளார். இருமொழிக் கொள்கையில் தான் தமிழ்நாடு அரசு செயல்படும் என உறுதியாக தெரிவித்துள்ளார். ரஜினி அரசியல் வருகை என்பது நீண்ட காலமாக 1996ஆம் ஆண்டில் இருந்து பேசப்படுகிற செய்தி தான். அதிமுக யாரை கண்டும் அஞ்சாது. அதிமுக கொள்கை கோட்பாடுகள், மக்கள் பணிகள் தான் தொடர்ந்து இந்த ஒன்பதரை ஆண்டுகள் செய்கின்ற வாய்ப்பை வழங்கியுள்ளது.
கரோனா தொற்று நோய் காலத்திலே செய்திருக்கிற சேவைகள், தடுப்பு நடவடிக்கைகள், முதலைமைச்சருடைய எளிமையான நடைமுறைகள் துணை முதலைமைச்சருடைய சேவைகள் அனைத்தும் மக்களை சென்றடைந்திருக்கிறது. அதிமுகவிற்கு நிகராக நாங்கள் யாரையும் கருதவில்லை" என்றார்.