உலகளாவிய பெருந்தொற்று நோயான கோவிட்-19 பாதிப்பு இந்தியாவில் தீவிரமடைந்துள்ளது. இந்திய அளவில் கரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்க பொது நலனைக் கருத்தில் கொண்டு தங்களது உயிரை பணயம் வைத்து மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கரோனாவுக்கு எதிரான போரில் முன்னணி வீரர்களாக பணியாற்றி வரும் மருத்துவர்களில், இதுவரை 175 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கரோனா பாதிப்பில் நாடு தழுவிய அளவில் இரண்டாம் இடத்தில் இருக்கிற தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கை பதிவாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் 43 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக அறிய முடிகிறது. இது தொடர்பாக தன்னுடைய அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள திரைப்பட நடிகரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், "இந்திய அளவில் தமிழகத்தில்தான் அதிக மருத்துவர்கள் கரோனாவால் பலியாவதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
பொது மக்களின் கரோனா மரணங்களைத் தவணை முறையில் வெளியிடும் அடிமை அரசு, மருத்துவர்கள் நிலை குறித்தும் விளக்கியாக வேண்டும். எடுபிடிகளின் இந்த மெத்தனம் தமிழகத்துக்கே தலைகுனிவாகும்" என விமர்சித்துள்ளார். மக்களின் உயிரைக் காக்கப் போராடிவரும் மருத்துவப் பணியாளர்களுக்குரியப் பாதுகாப்பை தமிழ்நாடு அரசு வழங்குவதில்லை என சமூக சமத்துவதற்கான மருத்துவ சங்கத்தின் பொதுச் செயலாளரான ரவீந்திர நாத் குற்றம்சாட்டி வருவது கவனிக்கத்தக்கது.