கரோனா பாதிப்பு காரணமாக குறைந்த அளவிலான பேருந்துகள் இயக்கப்படுகிறது. பேருந்துகள் ஓடாத காலத்தில் ஊழியர்களுக்கு பாதி ஊதியமும், பேருந்து சேவைகள் இயக்கப்பட்ட பின் முழு ஊதியம் வழங்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு மாறாக, கடந்த மாதம் முதல் பணியாற்றிவரும் ஊழியர்களுக்கு பாதி ஊதியம் மட்டுமே வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அதேபோல, சென்னையின் வெவ்வேறு பணிமனைகளில் பணியாற்றிவரும் ஊழியர்களுக்கு வெவ்வேறு அளவுகோலில் ஊதியம் வழங்கப்பட்டதாக அறியமுடிகிறது.
இதனைக் கண்டித்து அனைத்து போக்குவரத்துக் கழக ஊழியர்கள் கூட்டமைப்பினர் சார்பில் சென்னை பல்லவன் இல்லம் முன்பு இன்று போராட்டம் நடத்தப்பட்டது.
இது குறித்து பேசிய தொ.மு.ச பொருளாளர் நடராஜன், "தொழிலாளர்களிடம் குறைக்கப்பட்ட ஊதியத்தை திரும்ப வழங்க வேண்டும். பல்வேறு போக்குவரத்து கழகங்களில் உள்ள ஊதிய முரண்பாட்டை சரி செய்ய வேண்டும்.
கரோனா தொற்றால் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். உயிரிழக்கும் ஊழியர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க வேண்டும். முழுமையாக பேருந்து சேவையை இயக்கப்பட வேண்டும். போக்குவரத்து கழக ஊழியர்களிடம் இருந்து அனுமதியின்றி எடுக்கப்பட்ட விடுப்பை மீண்டும் வழங்க வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட அக விலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெறுகிறது. அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.
இந்த போராட்டத்தில் முறையாக தனி மனித இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை என மாவட்ட நிர்வாகம் தரப்பில் புகார் எழுந்துள்ளது.