மதுரை மாநகராட்சி மக்களின் குடிநீர் தேவைக்காக முல்லைப் பெரியாற்றில் இருந்து தண்ணீர் கொண்டு செல்வதற்காக ஆயிரத்து 295 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறப்பு திட்டத்தை கடந்த 2018ஆம் ஆண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்காக முல்லைப் பெரியாற்றின் தலைமதகு பகுதியான தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் தடுப்பணை கட்டப்பட்டு அங்கிருந்து தரையில் பதிக்கப்படும் ராட்சத குழாய்கள் மூலம் குள்ளப்பகவுண்டன்பட்டி, ஆண்டிபட்டி வழியாக மதுரைக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கு திட்டம் தயார் செய்யப்பட்டது.
ஆனால், இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி பாலைவனமாக மாறிவிடும் என தேனி மாவட்ட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இத்திட்டத்திற்கான ஆய்வுப் பணிகளில் ஈடுபட வந்த மதுரை மாநகராட்சி அலுவலர்களுக்கு கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த 2018ஆம் ஆண்டு பாதியிலேயே திரும்பிச் சென்றனர்.
இந்நிலையில், இந்த குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவதற்காக மதுரை மாநகராட்சி அலுவலர்கள் கடந்த சில நாள்களாக லோயர்கேம்ப் பகுதியில் ரகசிய ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இதனால் ஆத்திரமடைந்த தேனி மாவட்ட விவசாயிகள் மதுரை குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கூடலூர் பகுதியில் கண்டன சுவரொட்டிகளை ஒட்டி உள்ளனர்.
அதில் "பறிபோகுது! முல்லைப் பெரியாறு! பாலைவனமாகப்போகுது! கம்பம் பள்ளத்தாக்கு! தமிழக அரசே!
மதுரை குடிநீருக்காக என்ற பெயரில் பெருங்குழாய் மூலம் தண்ணீர் கொண்டுபோகும் திட்டத்தை கைவிடு!
கார்ப்ரேட் கம்பெனிகளிடம் முல்லைப் பெரியாற்றை விற்காதே.!
பசுமை கொழிக்கும் கம்பம் பள்ளத்தாக்கை பஞ்ச நாடான சோமாலியா நாடாக மாற்றாதே!
மதுரையில் அமையவிருக்கும் ஸ்மார்ட் சிட்டிக்கு தடையில்லாமல் தண்ணீர் வழங்க முல்லைப் பெரியாற்றை தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் ஏற்பாட்டை கைவிடு!" என அச்சிடப்பட்டுள்ளது.
இது குறித்து தேனி மாவட்ட விவசாயிகள் சார்பில் பேசிய கூடலூர் செங்குட்டுவன் கூறுகையில், "மதுரை மக்களின் குடிநீருக்காக தண்ணீர் கொண்டு செல்வதை தேனி மாவட்ட மக்கள் எதிர்க்கவில்லை. குழாய் வழியாக தண்ணீர் கொண்டு செல்வதால் தேனி மாவட்டத்தின் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விடும் என்பதாலே இந்த திட்டத்தை எதிர்க்கிறோம். இதற்காக செலவிடும் தொகையில் வைகை அணையை தூர்வாரினால் கூடுதலாக தண்ணீர் தேக்கி, ஏற்கனவே செல்கின்ற குடிநீருடன் அதிகமான தண்ணீர் வழங்க முடியும். எனவே தமிழ்நாடு அரசு இதனை பரிசீலனை செய்ய வேண்டும்" என தெரிவித்தார்.