சென்னை: தலைநகர் சென்னையில் உள்ள வங்கி ஏடிஎம்களில் பல லட்சங்களைக் கொள்ளையடித்த ஹரியானா கொள்ளையர்கள் மூன்று பேரை காவல் துறையினர் கைதுசெய்திருந்தனர். இந்த நிலையில் இன்று (ஜூலை 1) நான்காவது நபரையும் கைதுசெய்துள்ளனர்.
இதில் இரண்டாவது கொள்ளையன் வீரேந்திர ராவத்தை தரமணி காவல் துறையினர் நான்கு நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்திவருகின்றனர்.
விடிய விடிய விசாரணை
நேற்றிரவு முழுவதும் விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் ஹரியானா மாநிலம் மேவாட் மாவட்டம் பல்லப் கர்க் பகுதியைச் சேர்ந்த அமீர் அர்ஷ் என்பவருடன் வீரேந்திர ராவத்திற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அப்போது தமிழ்நாட்டுக்கு வந்து இருசக்கர வாகனம் ஓட்டினால் ஒரு லட்சம் ரூபாய் தருவதாகக் கூறி அமீர் அர்ஷ் கூறியதாக வீரேந்திர ராவத்திடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. வீரேந்திர ராவத்தின் வாக்குமூலத்தை காவல் துறையினர் காணொலியாகப் பதிவுசெய்து வருவதாகக் கூறப்படுகிறது.
விசாரணையில், தான் ஏழாம் வகுப்பு வரை படித்துள்ளதாகவும், தனக்கு ஏடிஎம் இயந்திரத்தில் உள்ள தொழில்நுட்பங்கள் தெரியாது என்றும், இருசக்கர வாகனம் ஓட்டுவதற்காகவே தன்னை அழைத்துவந்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
வீரேந்திர ராவத்தின் வாக்குமூலம்
ஹரியானாவில் தான் பிளம்பராக வேலை பார்த்துவந்ததாகவும், சென்னையில் வேலை வாங்கித் தருவதாக ஆசைவார்த்தை கூறியதன் அடிப்படையில் வந்ததாகவும் சொன்ன வீரேந்திர ராவத், ஆனால் சென்னைக்கு வந்த பிறகுதான் கொள்ளைச் சம்பவங்களுக்கு தன்னைப் பயன்படுத்தியது தெரியவந்தது என்றார்.
லட்சக்கணக்கில் பணத்தை கொள்ளையடித்த பிறகு தனக்கு கூடுதலாக இரண்டு லட்சம் ரூபாய் வேண்டும் எனப் பேரம் பேசியதாகவும் விசாரணையில் கூறியுள்ளார். கொள்ளையடித்த பணத்தில் இரண்டு லட்சம் ரூபாயை, தனது தாயின் வங்கிக் கணக்கில் உடனடியாகச் செலுத்துமாறு கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த வீரேந்திர ராவத்
அதன்படி கொள்ளையடித்த பணத்தில் இரண்டு லட்சம் ரூபாயை வீரேந்திர ராவத்தின் தாயின் கணக்கிற்கு அமீர் அனுப்பியுள்ளார். கொள்ளைச் சம்பவம் முடிந்து வீடு திரும்பிய வீரேந்திர ராவத் தனது தாயின் கணக்கில் உள்ள பணத்தை எடுக்க முயலும்போது பணம் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து வீரேந்திர ராவத் விசாரித்ததில் தாயிடம் வெற்று காசோலையில் கையெழுத்து வாங்கி, போட்ட பணத்தை தன் நண்பன் மூலம் அமீர் மோசடி செய்தது அறிந்து அதிர்ச்சியடைந்ததாகவும், அமீரிடம் பணத்தை வாங்க முயற்சித்ததாகவும் விசாரணையின்போது கூறினார். அதற்குள் அமீர் கைதாகிவிட்டதாகவும் வீரேந்திர ராவத் வாக்குமூலத்தில் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார்.