இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "கர்நாடகாவில் உள்ள தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு முன்னுரிமை, ஆந்திராவில் உள்ள தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வேலைவாய்ப்புகளில் 75 விழுக்காடு ஆந்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்று அம்மாநில அரசுகள் புதிய சட்டம் இயற்றியுள்ளன.
குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் 80 விழுக்காடு பணிகளும், ராஜஸ்தானில் 75 விழுக்காடு பணிகளும், மத்தியப் பிரதேசத்தில் 70 விழுக்காடு பணிகளும் உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
தெலங்கானாவில் தனிச்சட்டம் எதுவும் இல்லை என்றாலும் ஹைதராபாத் தவிர்த்த பிற பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனங்களில் உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்கினால் அரசு சலுகைகள் வழங்கப்படுகின்றன.
மத்தியப் பிரதேசத்தில் அம்மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும்தான் அரசு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களின் வேலைவாய்ப்பு உரிமைகளைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு என்ன செய்யப்போகிறது? தமிழ்நாட்டு தனியார் வேலைவாய்ப்புகளை மட்டும் அனைவருக்கும் திறந்துவிட்டால், தமிழ்நாட்டின் இளைஞர்கள் படித்த படிப்புக்கு வேலையில்லாமல் வறுமையில்தான் வாட வேண்டும்.
எனவே, தமிழ்நாட்டில் தனியார் துறை வேலைவாய்ப்புகளைத் தமிழர்களுக்கே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் தமிழ்நாட்டிற்குத் தொழில் முதலீடு வராது என்று எழுப்பப்படும் அச்சங்கள் தேவையற்றவை.
எனவே, தமிழ்நாட்டிலுள்ள தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் 80 விழுக்காட்டையும், அரசு வேலைகள் முழுவதையும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மத்திய பொதுத் துறை நிறுவனங்களிலும் அதிகாரிகள் நிலை தவிர்த்து மீதமுள்ள பணியாளர் பணியிடங்களைத் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களைக் கொண்டு நிரப்பவும், தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசு அலுவலகங்களில் கடைநிலைப் பணிகள் அனைத்தையும் உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கவும் மத்திய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.