கல்லூரி மாணவர்களின் அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக அறிவித்த தமிழ்நாடு அரசின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவானது, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பாக இன்று (நவ. 20) மீண்டும் விசாரணைக்குவந்தது.
இன்று 26ஆவது வழக்காக விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அடங்கிய அமர்வு, இன்று (நவ. 20) காலை வழக்குகளை விசாரிக்க துவங்கினர்.
அரியர் தேர்வு ரத்து செய்யப்படும்? செய்யப்படாதா? என்பதை அறியும் ஆர்வத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆன்லைன் விசாரணையைக் காண நீதிமன்ற இணைய வழியே இணைந்ததாகத் தெரிகிறது.
வழக்கு விசாரணைத் தொடங்கி அரசு மற்றும் மனுதாரர்கள் தரப்பில் தங்களது தரப்பு வாதங்களை வைக்க அணியமாகிக் கொண்டிருந்தபோது, திடீரென தொலைக்காட்சி சத்தம், அரட்டையடிப்படி போன்ற ஒலிகள் எழுந்தன.
இவை அனைத்தும் இணைய வழியே இணைந்திருந்த மாணவர்களால் விளைந்தது உறுதிசெய்யப்பட்டது.
மொத்தம் 350-க்கும் மேற்பட்டோர் லாக்இன் செய்திருந்ததுடன், வீடுகளில் தொலைக்காட்சி ஒலி, குழந்தைகள் சத்தம் மற்றும் நண்பர்களை மாமா, மச்சான் என அழைப்பது உள்ளிட்ட இடையூறுகள் ஏற்பட்டன.
இதனால் வழக்குகள் விசாரணையை பாதியிலேயே நிறுத்திய நீதிபதிகள், வழக்குகள் விசாரணையைக் காண தேவையில்லாமல் லாக்இன் செய்தவர்களை வெளியேறும்படி, சம்பந்தப்பட்ட வழக்குரைஞர்களைக் கேட்டுக்கொண்டனர்.
இருப்பினும் எந்த மாணவரும் வெளியேறவில்லை என அறியமுடிகிறது. இதனையடுத்து, விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைப்பதாக அறிவித்தனர்.
முன்னதாக, கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோதும் இதே போல ஏராளமான மாணவர்கள், விசாரணையில் பங்கேற்று இடையூறு ஏற்படுத்தினர். அப்போது, மாணவர்கள் வெளியேறவில்லை என்றால் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என நீதிபதிகள் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.