சென்னை: கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா புயல் தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களைத் தாக்கியது. இதில், கடலோர மாவட்டங்களில் வசித்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த பெரும் பாதிப்பில் சிக்கி 63 பேர் உயிரிழந்தனர். மேலும், 732 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.
குறிப்பாக, 88 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவு கொண்ட நெற் பயிர்கள், வாழை, தென்னை மரங்கள் உள்ளிட்ட விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டது. 56 ஆயிரத்து 942 குடிசை வீடுகள் மற்றும் 30 ஆயிரத்து 322 ஓட்டு வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்தந்தன.
எனவே, கஜா புயலால் இடிந்த வீடுகள், பாதிக்கப்பட்ட பயிர்கள், தென்னை மரங்கள், கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி கலைச்செல்வன், வெள்ளைச்சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.
இதையும் படிங்க: வீரப்பனின் உறவினர் சந்தேக மரணம் குறித்து வழக்கு: விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் மறுப்பு! |
இந்த வழக்குகள், தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் நீதிபதி முகமது ஷபீக் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எட்வின் பிரபாகர், “கடந்த 2018ஆம் ஆண்டு ஏற்பட்ட கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராமத்தினருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இழப்பீடு கிடைக்காதவர்கள் அரசுக்கு விண்ணப்பித்தால் பரிசீலிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
இந்த வாதத்தை பதிவு செய்த நீதிபதிகள், எவ்வளவு இழப்பீடு வழங்குவது என்பது குறித்து அரசு சட்டப்படி முடிவெடுக்க வேண்டும். அரசு நியாயமான இழப்பீடு குறித்து முடிவெடுக்க வேண்டும் எனக் கூறி வழக்கை முடித்து வைத்துள்ளனர்.