திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த முத்துப்பேட்டை அருகே உள்ள லகூன் தீவு என்ற பகுதியில் கடலோர காவல் படையினர் வனத்துறை அலுவலர் பெரியசாமி தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கே சந்தேகத்திற்கிடமான முறையில் ஆள்கள் இல்லாமல் இலங்கையைச் சேர்ந்த பைபர் படகு ஒன்று நிற்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அந்த படகை கைப்பற்றிய முத்துப்பேட்டை காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
படகில் வந்தவர்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபடும் நோக்கத்தில் வந்தவர்களா? அல்லது கஞ்சா கடத்தலுக்காக அந்தப் படகு பயன்படுத்தப்பட்டதா என்று காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாகவே இலங்கையிலிருந்து முத்துப்பேட்டைக்கு தொடர்ந்து கடத்தல் சம்பவங்கள் நடந்து வருவதால், கடலோர காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.