மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா அவரது உறவினர்கள் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களது சிறை தண்டனை காலம், 2021ஆம் ஆண்டு ஜனவரியில் முடிவடையும் சூழலில் அவர்களது சொத்துகள் மீது பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
சசிகலா குடும்பத்தினர் மற்றும் அவர்களது உறவினர்களின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட 187 இடங்களில் கடந்த 2017ஆம் ஆண்டு வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் போலி நிறுவனங்கள் மூலம் ரூ.1,500 கோடிவரை வரி ஏய்ப்பு செய்ததும், பல்வேறு சொத்துகளில் முதலீடு செய்ததும் கண்டறியப்பட்டது.
அதில், சிலவற்றை 2019ஆம் ஆண்டு வருமான வரித்துறையினர் முடக்கியதாக தகவல் வெளியாகிய நிலையில் தற்போது ரூ.2000 மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து வருமான வரித்துறையினர் கூறுகையில், "சசிகலா குடும்பத்தினர், அவர்களது உறவினர்களின் வீடுகளில், அலுவலங்களில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் ஏராளமான ஆவணங்கள் சிக்கின.
அந்த ஆவணங்களின் பேரில், நடவடிக்கை எடுக்கப்பட்டு சொத்துகள் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகின்றன.
சிறுதாவூர் நிலம், கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட ரூ. 2000 கோடி மதிப்பிலான 1,105 ஏக்கர் நிலங்கள் பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டுள்ளன" என தெரிவித்தனர்.
சொத்துகள் முடக்கப்பட்டது தொடர்பான தகவலை பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு வருமான வரித்துறை தெரியப்படுத்தியுள்ளனர்.
முடக்கப்பட்டுள்ள சொத்திற்கான ஆதாரங்களை சமர்பித்து பினாமி சொத்து இல்லை என நிரூபிக்க அவர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.