மதுரையை அடுத்துள்ள திருமங்கலத்தைச் சேர்ந்த சக்தி ராவ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "நான் மதுரை சட்டக்கல்லூரியில் மூன்றாண்டு சட்டப்படிப்பை தமிழ் வழியில் பயின்று கடந்த 2017ஆம் ஆண்டில் வழக்குரைஞராகப் பதிவு செய்துள்ளேன். 2019 ஜனவரி 1ஆம் தேதி அன்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமானது துணை ஆட்சியர், டி.எஸ்.பி, வணிக வரி அலுவலர் உள்ளிட்ட 181 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுத்தது. அதற்கு நான் விண்ணப்பித்திருந்தேன். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று, எழுத்து தேர்வும் எழுதினேன்.
அதைத் தொடர்ந்து பிரதான எழுத்துத் தேர்வு அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல் கடந்த டிசம்பர் 9ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் எனது பெயர் இடம்பெறவில்லை. தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான ஒதுக்கீட்டிலும் நான் தேர்வு செய்யப்படவில்லை. விதிப்படி தமிழ் வழியில் கல்வி பயின்றவருக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும். அந்த இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்கு நான் தகுதியானவனாக இருந்தபோதிலும் எனக்கு அந்த சலுகை வழங்கப்படவில்லை.
இது குறித்து விசாரித்தபோது தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான இடஒதுக்கீட்டு சலுகை, தொலைநிலைக் கல்வியில் பயின்றவருக்கும் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது. தொலைநிலைக் கல்வி பயின்றவர்களுக்கு தமிழ் வழியில் பயின்றதற்கான இட ஒதுக்கீடு வழங்குவது பொருத்தமாக இருக்காது. தொலைநிலைக் கல்வியில் பயில்வோர் சில பாடங்களை ஆங்கில வழியில் பயில்கின்றனர். சில பாடங்களை தமிழ் வழியில் படிக்கின்றனர். ஆகவே, இவர்களை தமிழ் வழியில் பயின்றவர்களாக கருத இயலாது.
இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் தகவல் கேட்டபோது எவ்வித தகவலையும் வழங்கவில்லை. டி.என்.பி.எஸ்.சியின் ஒவ்வொரு தேர்வு அறிவிப்பிலும் தமிழ் வழியில் பயின்றவருக்கு கொடுக்கப்படும் 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டை பெரும்பாலும் தொலைநிலைக் கல்வி பயின்றவர்களே பெற்று வருகின்றனர்.
எனவே, தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான சலுகை அடிப்படையில் தேர்வானவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கத் தடை விதிக்க வேண்டும். தொலைநிலைக் கல்வியில் அல்லாமல் கல்லூரிக்கு சென்று தமிழ் வழியில் பயின்றவர்களை அடிப்படையாகக் கொண்டு புதிய பட்டியல் வெளியிட்டு குரூப் 1 பணியிட நியமனத்தை நடத்த உத்தரவிட வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பாக இன்று (நவ.07) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை ஆராய்ந்த நீதிபதிகள், "இந்த மனு பொது நலன் சார்ந்ததாக உள்ளது. இந்த மனு தமிழ்நாடு அரசு, பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் போட்டித் தேர்வர்களின் நலன் சார்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் இயங்கிவரும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்பட அனைத்து பல்கலைக்கழகங்களும் இந்த வழக்கில் எதிர் மனுதாரராக சேர்க்கப்படுகின்றனர்" என அறிவித்தனர்.
மேலும், இந்த மனு தொடர்பாக பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.