கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், அரங்கங்கள், அருங்காட்சியகங்கள் உள்ளிட்டவை ஏழு மாதங்களாக மூடப்பட்டிருந்தன. மத்திய அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை அவ்வப்போது அமல்படுத்திவருகிறது.
அதன் ஒரு பகுதியாக, சுற்றுலாத் தளங்கள் நவம்பர் 10ஆம் தேதி முதல் செயல்படலாம் எனத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து, சர்வதேச சுற்றுலா தளமான குமரி கடல் நடுவே அமைந்துள்ள உலகப்புகழ் பெற்ற திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபம் ஆகியவற்றுக்கான சுற்றுலா படகு சேவை இன்று (நவ. 11) முதல் பொதுமக்களுக்காக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இன்று முதல் நடைபெறும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்த நிலையில் திருவள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் மண்டபத்திற்கும் சுற்றுலா படகு சேவை இன்று தொடங்கப்படவில்லை.
இது குறித்து பூம்புகார் கப்பல் நிர்வாகத்திடம் கேள்வியெழுப்பியபோது, "திருவள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் மண்டபத்திற்கும் சுற்றுலா படகு சேவை தொடங்குவது தொடர்பாக எங்களுக்கு முறையான அறிவிப்பு வரவில்லை.
தமிழ்நாடு சுற்றுலா துறையிடமிருந்து முறையான ஆணை கடிதம் அல்லது தொலைபேசி மூலம் வந்தடைந்தப் பின்னரே சுற்றுலா படகு சேவை தொடங்கப்படும்" எனத் தெரிவித்தார்.
இதனால் சுற்றுலா படகு சேவை தொடங்குவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.