இதுதொடர்பாக, தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று (அக்.7) வெளியிட்ட அறிக்கையில், " சென்னை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன ஒன்பது மீனவர்களை மீட்டுக் கொண்டுவர தமிழ்நாடு அரசு சீரிய முயற்சிகளை மேற்கொண்டது.
அதன் பலனாக, கடந்த செப்.14 ஆம் தேதியன்று மியான்மர் கடற்பகுதி அருகே தத்தளித்து நின்ற, தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்களை மியான்மர் நாட்டு கடற்படையினரால் மீட்கப்பட்டு பத்திரமாகக் கரைக்கு கொண்டு சேர்த்தனர்.
இந்நிலையில், தனிப்பட்ட நிகழ்வில் காணாமல் போன மீனவர் பாபுவை தேடும் பணி, மியான்மரில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசு மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளால் எட்டு மீனவர்கள் இன்று (அக்.7) விமானத்தின் மூலம் மியான்மரிலிருந்து டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர்.
இவர்களுக்கு டெல்லியில் மேற்கொள்ளப்பட வேண்டிய கரோனா தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகள், கடவுச்சீட்டு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு, விரைவில் தமிழ்நாடு கொண்டுவர டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் மூலம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று அதில் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.