உத்தரப் பிரதேச மாநிலத்தில் கரோனா நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபடும் மருத்துவர்களுக்கும், சுகாதார ஊழியர்களுக்கும் உரிய பாதுகாப்பு வசதிகள் செய்துதரப்படுவதில்லை என தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக, வாரணாசியில் உள்ள 32 சுகாதார மையங்களில் உள்ள முக்கிய பணியாளர்கள் தங்களது பதவி விலகல் கடிதங்களை அம்மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த பி.எஸ்.பி தலைவர் மாயாவதி, "உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் மருத்துவப் பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு சாதனங்கள் வழங்கப்படுவதில்லை. போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் தொடர்ந்து உழைத்து வரும் அவர்களின் நிலைமை மோசமடைந்து வருகிறது.
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தங்களது உயிரைப் பணயம் வைத்து சேவையாற்றிவரும் மருத்துவர்கள் மீது அரசின் அழுத்தம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. வாரணாசியில் உள்ள 32 சுகாதார மையங்களில் உள்ள பணியாளர்கள் பதவி விலகியுள்ளனர். மாநிலத்தை ஆளும் பாஜக அரசு, மருத்துவ ஊழியர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க முன்வர வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.
உத்தரப் பிரதேசத்தில் நேற்று (ஆகஸ்ட் 12) ஒரே நாளில் 4 ஆயிரத்து 583 பேருக்கு கோவிட் -19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தற்போது 49 ஆயிரத்து 347 பேர் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுவரை 84 ஆயிரத்து 661 பேர் இந்த நோயிலிருந்து மீண்டுள்ளனர்.