சென்னையை அடுத்துள்ள மண்ணடியில் திவான் அக்பர் என்ற தொழிலதிபர் கடத்தப்பட்டதாக முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் ஆகஸ்ட் மாதம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, காவல்துறை விசாரணை மேற்கொண்டதில் பயங்கரவாதி தவ்பிக் மற்றும் கூட்டாளிகள் கடத்தியது தெரியவந்தது.
தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் போல் நாடகமாடி கடத்தியதும் விசாரணையில் அம்பலமானது. இது தொடர்பாக நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான தவ்பிக்கின் மனைவி சல்மாவையும் திருச்சியில் கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த முதல்கட்ட விசாரணையில் செம்மரக்கட்டை கடத்தல் வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக தான் தொழிலதிபர் கடத்தப்பட்டார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, தலைமறைவான தவ்பிக்கை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் தீவிரமான தேடிதல் வேட்டை நடைபெற்று வருகின்றது.
இதனிடையே, தவ்பிக் கேரளாவில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தனிப்படை தற்போது காவல்துறையினர் கேரளாவில் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில், தவ்பீக்கின் முக்கிய கூட்டாளியான காதர் என்கிற கட்டை காதர் என்பவரை கோவையில் காவல்துறையினர் இன்று (செப்டம்பர் 3) கைது செய்துள்ளனர்.
செம்மரக்கட்டை, போதைப் பொருள் கடத்தல், ஹவாலா போன்ற பல்வேறு விவகாரங்களில் காதர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளதாக காவல்துறை வட்டாரம் தகவல் தெரிவிக்கின்றன. தலைமறைவாக உள்ள தவ்பிக்கின் வலதுகரமாக செயல்பட்டு வந்த காதரிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.