சென்னையில் இருந்து ரூ. 10 லட்ச ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்களை திருப்பூர் பகுதிகளில் செயல்படும் டாஸ்மாக் கடைகளில் விநியோகம் செய்வதற்காக லாரி ஒன்று ஏற்றி சென்றுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சிங்காரவாடி பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த லாரி திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக பாலத்தின் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
லாரி நிலை தடுமாறி மோதியதில் சுமார் ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான மது பாட்டில் பெட்டிகள் சாலையின் ஓரம் சரிந்து சேதமானது.
சம்பவம் குறித்து தகவலறிந்த கடலாடி காவல்துறையினர் விபத்து நடைபெற்ற இடத்திற்கு விரைந்துவந்து, விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே, விபத்து குறித்து சென்னையில் உள்ள அரசு மதுபான அலுவலகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து மாற்று வாகனத்தில் மதுபாட்டில்களை ஏற்றி திருப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தடுப்புச் சுவர் மீது மோதிய லாரி முழுவதும் சாயாமல் நின்றதால் 10 லட்சம் மதிப்பிலான அரசு மது பாட்டில்கள் முழுவதும் சேதமடையாமல் தப்பியதாக அறிய முடிகிறது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் சிறிய காயங்களுடன் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.