ETV Bharat / state

'குமரி டி.எஸ்.பி.,யின் துன்புறுத்தலால் தற்கொலை செய்துகொண்ட மருத்துவர்' - ஸ்டாலின் வேதனை - Kanyakumari doctor committed suicide

சென்னை : குமரி காவல்துறை டி.எஸ்.பி பாஸ்கரின் கொடுமையால் கரோனா காலத்தில் மக்களுக்கு பணியாற்றிய மருத்துவர் சிவராம பெருமாள் தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

குமரி டி.எஸ்.பியின் டார்ச்சரால் தற்கொலை செய்துகொண்ட குமரி மருத்துவர்!
குமரி டி.எஸ்.பியின் டார்ச்சரால் தற்கொலை செய்துகொண்ட குமரி மருத்துவர்!
author img

By

Published : Oct 27, 2020, 3:44 PM IST

இது தொடர்பாக அவர் இன்று (அக்டோபர் 27) வெளியிட்டுள்ள அறிக்கையில், "குமரி மாவட்ட திமுக மருத்துவரணி துணை அமைப்பாளர் டாக்டர் சிவராம பெருமாள், டி.எஸ்.பி ஒருவரின் துன்புறுத்தலால் தற்கொலை செய்து கொண்டிருப்பதும்; சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் இரட்டைக் கொலை வழக்கினை விசாரித்த – சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் கூறியுள்ள தகவல்களும்; பேரதிர்ச்சியளிக்கின்றன.

கரோனா காலத்தில் மக்களுக்கு மருத்துவப் பணியாற்றிக் கொண்டிருந்த மருத்துவர் சிவராம பெருமாளை, அம்மாவட்டத்தில் உள்ள டி.எஸ்.பி. பாஸ்கர் விசாரணை என்ற பெயரில் அழைத்து மிரட்டி, அவரது கண்ணெதிரிலேயே அவருடைய மனைவியை தரக்குறைவாக பேசியதால், மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.

இந்த டி.எஸ்.பி. பாஸ்கர் போன்ற ஒரு சிலரால் - தமிழ்நாட்டின் திறமை மிக்க காவல்துறையில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான காவலர்களுக்கும், அலுவலர்களுக்கும் இருக்கும் நன்மதிப்பு கெடுவது மிகுந்த கவலையளிக்கிறது.

சாத்தான்குளம் ஜெயராஜ் - அவரது மகன் பென்னிக்ஸ் கொலை வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ., “கொலையுண்ட இருவருக்கும் ரத்தக் காயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சாத்தான்குளம் காவல் நிலைய சுவர்களில் இருந்த ரத்த மாதிரியும், இந்த இருவரின் ஆடைகளில் இருந்த ரத்த மாதிரியும் பொருந்தியுள்ளன. ஆகவே கடுமையாகத் தாக்கப்பட்டு உயரிழந்தது தெரியவருகிறது. இருவர் உடல்களிலும் 18 இடங்களில் காயங்கள் இருந்தன. பென்னிக்ஸை அரைநிர்வாணமாக்கி, குனிய வைத்து பின்பகுதியில் தாக்கியுள்ளனர். தந்தை - மகன் இருவர் மீதும் பொய் வழக்குப் பதிவு செய்துள்ளனர்” என்று இதயத்தைக் கலங்கடிக்கும் தகவல்களைக் கூறியிருக்கிறது.

அவ்வழக்கில் முக்கிய சாட்சியாக உள்ள காவல் நிலைய ஏட்டு ரேவதி, “என்னையும், அப்பாவையும் அடிக்காதீர்கள் என்று காவல்துறையினர் காலில் விழுந்து தந்தையும், மகனும் கெஞ்சினார்கள். ஆனாலும் கடுமையாக ரத்தம் சொட்டச் சொட்டத் தாக்கினார்கள்” என்று கூறியிருக்கும் தகவல் கண்கலங்க வைக்கிறது.

ஆனால் இந்தக் கொடூரக் கொலை நடந்த உடன் முதலமைச்சர் பழனிசாமி என்ன சொன்னார்? “சிறையில் இருந்த பென்னிக்ஸுக்கு மூச்சுத்திணறலும், ஜெயராஜுக்கு உடல் நலக்குறைவும் ஏற்பட்டு, இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் அங்கு உயிரிழந்தார்கள்” என்று உண்மைக்கு புறம்பாக அறிக்கை வெளியிட்டார். ஒரு மாநிலத்தின் முதலமைச்சர்- அதுவும் காவல் துறையை கையில் வைத்திருப்பவர், இப்படி சாத்தான்குளம் காவல் நிலையத்தில் உள்ள ஒரு சில காவலர்கள் செய்த கொலையைத் திட்டமிட்டு மறைத்தார்.

அதுமட்டுமின்றி சட்ட அமைச்சர் சி.வி. சண்முகத்தின் மூலமும் மறைக்க வைத்தார். 1.7.2020 அன்று சட்ட அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், “இருவரும் (ஜெயராஜ், பென்னிக்ஸ்) உடல் நிலை சரியில்லாமல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்” என்று முழுப் பூசணிக்காயை, மனசாட்சியின்றி இலைச் சேற்றில் மறைத்தார்.

சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் அதிமுக அரசின் மீது திமுக வைத்த குற்றச்சாட்டுகள் உண்மை என்பது ஆதாரபூர்வமாக - சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை வடிவமாகவே வெளிவந்து விட்டது. இப்போதாவது திமுக நியாயத்தின் பக்கம் நின்று போராடுகிறது; “அரசியலுக்காக” மட்டும் அல்ல என்பதை முதலமைச்சர் பழனிசாமி புரிந்து கொள்ள வேண்டும்.

கொலைகளை மறைத்ததற்காகவும், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் உள்ள ஒரு சில காவலர்களை காப்பாற்ற ஒட்டுமொத்த தமிழ்நாட்டு காவல்துறையின் நன்மதிப்பையே கெடுத்ததற்காகவும், முதலமைச்சர் பழனிசாமி தமிழ்நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்பாரா ?" என ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.